தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS Exam) எழுதி சிறப்பிடம் பிடித்து ஒன்றிய அரசின் உதவித் தொகை பெற இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை / உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.



தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒன்றிய அரசின் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS Exam) 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் தேர்வு எழுதி சிறப்பிடம் பிடித்து ஆண்டிற்கு ரூ.12,000 வீதம் 4 ஆண்டுகளில் ரூ.48000 (ரூபாய் நாற்பத்தி எட்டாயிரம்) ஒன்றிய அரசின் உதவித் தொகை பெற இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 120 நடு நிலை, உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 368 மாணவர்களுக்கு பாராட்டு விழா 25.04.2025 அன்று தென்காசி இ.சி.ஈ அரசு (ஆண்கள்) மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அமலா தங்கத்தாய், தென்காசி நகர் மன்றத் தலைவர் சாதிர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிகரம் தொட்ட 368 சாதனையாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினார். மேலும், முதல் மூன்று இடங்களை பெற்ற ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளி, புளியங்குடி, ஏ.வி.எஸ் உயர் நிலைப் பள்ளி நெடுவயல், ஸ்ரீ சிவ சைல நாத நடுநிலைப் பள்ளி மற்றும் புளியங்குடி, பரமானந்தா நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கினார். குறிப்பாக மாநில அளவில் ஆறாம் இடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டினார். விடுமுறை நாட்களில் பயிற்சியை நடத்திய வாசுதேவ நல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன் பாராட்டப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன், பணி நிறைவு மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஜெயபிரகாஷ் ராஜன், எவரெஸ்ட் கல்விக் குழும தாளாளர் டாக்டர். முகைதீன் அப்துல் காதர், தென்காசி ஆகாஷ் அகாடமி பொது மேலாளர் செந்தில் குமார், இலஞ்சி ஆர்.பி. பள்ளி ஆசிரியர் சுரேஷ் குமார், குலையநேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுக நயினார், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் காதர் மீரான், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகேசன், கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் சுப்புலெட்சுமி, சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன், ஏ.வி.எஸ். உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள் சாமுவேல் மற்றும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்