நிபா வைரஸ், மிகவும் கொடூரமான வைரஸ் ஒன்று சத்தம் காட்டாமல் இந்தியாவிற்குள் நுழைந்து பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டனர்.
இந்த நிபா வைரஸ் என்பது என்ன அது எப்படி பரவுகிறது என்றும் அதனை எப்படி தடுக்கலாம் என்றும் தற்போது பார்க்கலாம். புனேயில் உள்ள வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மையம் கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையாக தாக்கும் வல்லமையை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பத்து பேர் உயிரிழந்த நிலையில், மக்கள் அனைவருக்கும் முதற்கட்ட சோதனை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக தீவிர ஆய்வில் மத்திய அரசு சார்பாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் கேரள சுகாதாரதுறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கூறியுள்ளார். மேலும் இதேபோன்று நிபா வைரஸ் காய்ச்சல் வங்கதேசத்திலும் பரவியதாகவும், அப்போது அதனை அந்நாட்டு அரசு லாவகமாக கையாண்டு, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றியதையும் ராஜீவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையான தாக்கும் ஒரு நோய் கிருமி என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது முதன் முதலில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 1998-1999 ஆம் ஆண்டுகளில் பன்றிகளில் இருந்து மனிதர்களிடம் பரவியது. இதனைத்தொடர்ந்து நிபா வைரஸின் தாக்குதலால் 265 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் குதிரையிலிருந்து மனிதர்களுக்கும், சில குறிப்பிட்ட வகை வௌவால்களிலிருந்தும் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபா வைரஸின் முக்கியமான அறிகுறிகள்:
லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.
தடுப்பு மருந்துகள் கிடையாது:
நிபா வைரசுக்கு என்று தனிப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ கிடையாது. ஆனால் இந்த வைரஸை தரமான நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், திறந்தவெளி குடிநீரை குடிக்க கூடாது என்றும் மரத்தில் இருந்து கீழே விழும் பழங்களை உண்ண கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











