நிலக்கோட்டை பகுதியில், அரசு கள்ளர் விடுதியை, தமிழக அரசு சமூக நீதி விடுதிகள் என, பெயர் மாற்றத்திற்கு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை 15 கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விளாம்பட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, ராமராஜபுரம், முசுவனூத்து, துரைச்சாமிபுரம், நிலக்கோட்டை, காமாட்சிபுரம், தெப்பத்துப்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பிரமலைக்கள்ளர் இன மக்கள், தற்போது தமிழக அரசு அரசு கள்ளர் விடுதிகளை சமூக நீதி விடுதிகள் என, பெயர் மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூறாண்டுகளுக்கு மேலாக அரசு கள்ளர் விடுதிகள் என, இருக்கும் பெயர் தொடர வேண்டும் என்றும், அரசு போடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக் கோரியும், டி.என்.டி., மக்களுக்கு இந்திய அரசியலமைப்பில் இடம் பெற, மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனிகலம் உருவாக்க கோரி, வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, கிராம பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கையில் கருப்பு கூடிய பிடித்து ஊர்வலமாக தெருக்களில் சென்று, ஒவ்வொரு வீடுகளில் கருப்பு கொடி கட்டி உள்ளனர். மேலும், கருப்பு கொடி கட்டி அதன் அருகில் நின்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டத் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். நிலக்கோட்டை பகுதியில் 15 கிராமங்களில் கருப்பு கொடி போராட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.