மதுரையை அடுத்த சோழவந்தான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேர்ந்த உத்திரபாண்டி மகன் சிட்டு என்கிற ஸ்ரீதர் ( 19).இவர் இரவு நண்பர்களுடன் வெளியில் புறப்பட்டு சென்றார். அதன் பிறகு இவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஸ்ரீதரின் தாய் முருகேஸ்வரி மகனை தேடி அலைந்து திரிந்தார்.அப்போது இதே பகுதியில் வசிக்கும் பொட்டுலு கணேசன் என்பவர், “உங்களின் மகன் முள்ளிப்பள்ளம் சுடுகாட்டில் ரத்தக் காயங்களுடன் கிடக்கிறார்” என்று கூறியுள்ளார்.இதனையடுத்து முருகேஸ்வரி மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது முள்ளிப் பள்ளம் சுடுகாட்டில் ஸ்ரீதர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.இதுதொடர்பாக முருகேஸ்வரி காடுப்பட்டி போலீசில் “என் மகன் சாவில் சந்தேகம் உள்ளது” என்று புகார் செய்தார். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் 2 பேருடன் ஸ்ரீதர் வெளியில் சென்றது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பேரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.போலீசாரின் விசாரணையில் அவர்கள் முள்ளிப்பள்ளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் கோபாலகிருஷ்ணன் ( 18), குமரகுரு மகன் சங்கரன் ( 18) என்பது தெரியவந்தது.போலீசாரின் விசாரணையில் “ஸ்ரீதர் மற்றும் கோபாலகிருஷ்ணன், சங்கரன் ஆகிய 3 பேரும் முள்ளிப்பள்ளம் சுடுகாட்டு பகுதியில் மது அருந்த சென்று உள்ளனர்.அப்போது மதுவுக்கு காசு கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக கழுத்தில் குத்தி உள்ளனர்.இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்தில் இறந்தார். அதன்பிறகு இரண்டு பேரும் எதுவும் நடக்காதது போல வீட்டுக்கு திரும்பி விட்டனர்” என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கோபாலகிருஷ்ணன், சங்கரன் ஆகிய 2 பேரையும் காடுபட்டி போலீசார் பேரை கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.