பழனியருகே பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் காவலுக்கு இருந்த நாயை வெட்டிவிட்டு, வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகையை கொள்ளையடித்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது தாளையூத்து. இங்கு முருகசாமி(60) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தோட்டத்திலேயே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்துவரும் விவசாயி முருகசாமியின் வீட்டில் அவரது மனைவி சின்னத்தாய், அவரது இரண்டு மகள், ஒருமகன் மற்றும் முருகசாமியின் அக்கா உள்பட ஏழுபேர் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் முருகசாமியின் வீட்டிற்குள், பத்திற்கும் மேற்பட்ட முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். அப்போது வீட்டில் இருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது,
நள்ளிரவு 12மணியளவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டது தொடர்ந்து வீட்டின் கதவை சிலர் கதவை பலமாக தட்டினர் நாங்கள் கதவை திறக்காததை அடுத்து கதவை உடைக்க ஆரம்பித்தனர்.
பின்னர் வேறுவழியின்றி கதவை திறந்தவுடன் உள்ளே பத்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வந்தனர் அவர்கள் வீட்டில் இருந்த பெண்களை அடித்து, முருகசாமி மனைவி சின்னத்தாய் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அணிந்திருந்த மற்றும் வீட்டில் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
வெளியேவந்து பார்ததபோது காவலுக்கு இருந்த நாயை அரிவாளால் வெட்டியது தெரியவந்ததாக தெரிவித்தனர்.
ஆயுதங்களுடன் வந்து மிரட்டி இருபது சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அறிந்து விரைந்து வந்த பழனி டி.எஸ்.பி விவேகானந்தன், சாமிநாதபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பழனி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.