எதற்கும் அஞ்சாத கொள்கைச் சிங்கம் ஜெ.அன்பழகன் மறைவு தாங்க இயலாதது:-வைகோ இரங்கல்..
“ஒன்றிணைவோம் வா” என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விடுத்த அழைப்பினை ஏற்று, உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும் என்பதை மறைத்து, கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், மலை குலைந்தாலும் நிலை குலையாத மாவீரன் ஜெ.அன்பழகன், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சூரன், தலைவரின் கட்டளை என்றால், கணப் பொழுதில் உயிரையும் பணயம் வைக்கும் உத்தமத் தொண்டன் ஆவார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உயிரான சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள், நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று பகைவர் கூட்டத்தை எச்சரிப்பவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் சண்டமாருதமாய் முழங்கியவர்.
அவரது தந்தையார் பழக்கடை ஜெயராமன், சென்னை மாநகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்த முன்னோடிச் செயல்வீரர்களுள் ஒருவர் ஆவார்.
1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், திரு ஜெ.அன்பழகன் அவர்கள், அன்றைய தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் தளபதி ஸ்டாலின் அவர்களையும், என்னையும் வைத்து, எம்.ஜி.ஆர். நகரில் கொட்டிய மழைக்கு நடுவே பொதுக்கூட்டத்தை நடத்தி, எங்கள் இருவருக்கும் தங்கக் கணையாழி அணிவித்தார்.
மாறாத மந்தகாசப் புன்னகையோடு, மாற்றாரையும் ஈர்க்கின்ற அன்பு தவழும் புன்சிரிப்போடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று இயக்கத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு, கட்சியின் புகழ் ஓங்குவதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்தியவாறு உயிர் நீத்ததன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்றில் அழியாத புகழ் இடத்தைப் பெற்றுவிட்டார் அன்பழகன்.
இந்தக் கொடுந்துயரைத் தாங்க முடியாமல் தி.மு.கழகத் தலைவர் தவிக்கின்றார். அவருக்கும், அன்பழகன் அவர்களின் குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளுக்கும் ஆறுதல் தேறுதல் கூற முடியாது என்ற நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்.
வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை -8 10.06.2020




You must be logged in to post a comment.