“ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஊடக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா..? -மத்திய, மாநில அரசுகளுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.!
கொரானா நோய் தொற்று உலகையே முடக்கிப் போட்டிருக்கும் சூழலில் பல்வேறு தொழில்துறைகள் செயலிழந்து, அத்துறையில் உற்பத்தி பணிகள் முற்றிலுமாக முடங்கிப் போய் கிடக்கிறது. விளைவு இது வரை அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏணியாக இருந்து பணிபுரிந்து வந்த ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்டு, அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பும் பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது.
குறிப்பாக ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகத்துறையை சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியை முன்னணி ஊடக அதிபர்கள் மும்முரமாக முன்னெடுத்து வருவதும், பல ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காமல் அலைகழிக்கப்படுவதும் அதனை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் கண்டனத்திற்குரியது.
குறிப்பாக அச்சு ஊடகத்தில் பாரம்பரியமிக்க விகடன் குழுமத்தில் இருந்து இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணிகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், விகடன் குழுமம் மட்டுமின்றி முன்னணி காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்கிற தகவலும் தொழிலாளர்களின் நிலை குறித்து மிகுந்த கவலை கொள்ளச் செய்கிறது.
மேலும் கொரானா ஊரடங்கை காரணம் காட்டி ஊழியர்களுக்கு ஊதியம் தர மறுக்கவோ, ஊதியத்தை குறைக்கவோ அல்லது பணி நீக்கம் செய்யவோ கூடாது என்கிற மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை மதிக்காமல் ஊடகத்துறை அதிபர்கள் காற்றில் பறக்க விட்டிருப்பதையும், இதுவரை தங்களது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உயிரைக் கொடுத்து பணியாற்றிய ஊழியர்களை இந்த பேரிடர் காலத்தில் கைவிடுகின்ற செயலை அனைவரும் ஒருங்கிணைந்து கண்டித்தே ஆக வேண்டும்.
ஏனெனில் இதுவரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எந்த ஒரு நிகழ்வுகளோ…, பிரச்சினைகளோ நடைபெற்றால் அதனை மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் தற்போது வேலையிழந்து, வருமானமின்றி நிற்பதையும், ஊழியர்களின் வேலையை பறிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வர எந்த ஒரு ஊடகமும் முன் வராதது “தண்ணீரில் அழும் மீன்களின் கண்ணீரை யாரறிவார்..?” என்பதை நினைவூட்டுவதாக இருக்கிறது.
எனவே விகடன் குழுமம் உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் ஆட்குறைப்பு செய்வதற்காக ஊழியர்களின் வேலையை பறித்து வீட்டுக்கு அனுப்பும் பணியை செய்து வரும் ஊடக நிறுவனங்கள் உடனடியாக தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொண்டு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும், அரசின் உத்தரவை மீறி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஊடக உரிமையாளர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நன்றி,
சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர் & மாநில தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.




You must be logged in to post a comment.