18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தில் இளஞ்சிறுத்தைகளும் பங்கேற்கும்:விசிக அறிவிப்பு..

தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தில் இளஞ்சிறுத்தைகளும் பங்கேற்கும்:விசிக அறிவிப்பு..

எழுதியவர்: Askar May 25, 2020, 9:31 pm

மே 27, அன்று திருவைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தில் இளஞ்சிறுத்தைகளும் பங்கேற்கும்.

திருவைகுண்டம் தென்காலில் இருந்து கடம்பாகுளத்திற்கு வரும் தண்ணீர் பாசன கால்வாய் மூலம் இதன் கீழ்பகுதியில் உள்ள அம்மன்புரம், பெரியகுளம், நல்லூர் கீழக்குளம், மேலக்குளம், ஆறுமுகநேரி குளம், சீனிமாவடிகுளம், நாலாயிரமுடையார் குளம், வண்ணான் குளம், கானம் குளம், எல்லப்ப நாயக்கன்குளம் உள்ளிட்ட 12-குளங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்மன்புரம் பெரிய குளம் மூலம் 6,030 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. தற்போது இக்குளப்பாசனப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.

10-நாட்களுக்கு முன்பு திருவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி, திருச்செந்தூர் தாலுகா விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருவைகுண்டம் அணையிலிருந்து மே 15 முதல் 31வரை தண்ணீர் திறந்துவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். இச்செய்தி அறிவிப்பிற்காக முதல்வர், மாவட்ட அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், அதிமுக மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இளஞ்சிறுத்தைகள் சார்பில் நன்றி தெரிவித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருவைகுண்டம் வடகாலில் மட்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தென்காலில் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் திருச்செந்தூர் தாலுகா பகுதி வாழை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர்.

இதனையறிந்த மேல புதுக்குடி கிராம நிர்வாக விவசாயிகள் திருவைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில் தண்ணீர் திறக்கவில்லையெனில் எதிர்வரும் 27-05-2020 அன்று சாலைமறியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நியாயமான இப்போராட்டத்திற்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை தனது முழுமையான ஆதரவை அளிப்பதோடு, சாலைமறியல் போராட்டத்திலும் விவசாயிகளுடன் பங்கேற்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்போதும் திருவைகுண்டம் வடகாலில் தண்ணீர் திறப்பதும், தென்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை அலைக்கழிக்கும் போக்கும் ஒவ்வொரு ஆண்டும் நீடிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

எனவே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உடனடியாக திருவைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுப்பதுடன், தென்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் இனிமேல் எத்தகைய சிக்கலும் நீடிக்காத வகையில் உறுதியான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமென்றும் மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

சு.விடுதலைச்செழியன் மாவட்ட அமைப்பாளர் – இசிஎபா விசிக, தூத்துக்குடி தெற்கு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!