17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது:-வைகோ கடும் கண்டனம்..!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது:-வைகோ கடும் கண்டனம்..!

எழுதியவர்: Askar May 23, 2020, 9:59 am

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது:-வைகோ கடும் கண்டனம்..!

சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து இருந்தார். தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கலைஞர் செய்த பணிகளைத்தான் எடுத்துக் கூறியிருந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் சந்தித்து வருகின்ற ஆயிரக்கணக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண திராணியற்ற அ.தி.மு.க. அரசு, தற்போது ஆலந்தூர் பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை ஏவி, கைது செய்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஊழல் முகத்திரையைக் கிழிப்பதற்கும், அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, எதிர்க் கட்சியின் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறார். மிசா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவாசத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட இலட்சிய வீரர்தான் ஆர்.எஸ்.பாரதி.

கொரோனா தொற்று எனும் கொடும் கொள்ளை நோய் எங்கும் பரவி உயிர்களைச் சூறையாடி வரும் வேளையில், குற்றமற்ற ஆர்.எஸ்.பாரதியைச் சிறையில் அடைக்க முயல்வதன் மூலம், நடைபெறுகிற அரசு கொலைவெறி பிடித்த இதயமற்ற ஈனத்தனமான அரசு என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது.

பாசிச வெறிகொண்ட அ.தி.மு.க. அரசு, இதுபோன்ற எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணராமல், காட்டுத் தர்பார் நடத்துகின்ற எடப்பாடி அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்கைத் திரும்பப் பெற்று, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை -8 23.05.2020

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!