17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன், மண்டபம் , தங்கச்சிமடம் பகுதிகளில் சேதமடைந்த படகுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

பாம்பன், மண்டபம் , தங்கச்சிமடம் பகுதிகளில் சேதமடைந்த படகுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

எழுதியவர்: mohan May 19, 2020, 5:59 pm

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், மண்டபம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில், சூறாவளி காற்றினால் சேதமடைந்த படகுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் இன்று (19.5.2020) பார்வையிட்டு மீனவர்களின் கோரிக்கையை இன்று (19.5.2020) கேட்டறிந்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் 237 கி.மீ அளவிற்கு கடற்கரைப் பகுதியை கொண்ட மாவட்டமாகும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடித் தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 1,46,000 டன் அளவிற்கு மீன்பிடி உற்பத்தி கிடைக்கப் பெற்று மாநில அளவிலான மீன் உற்பத்தியில் இராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்தில் ஏறத்தாழ 1,500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 4,000-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் உள்ளன.

மீனவர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேரிடர் காலங்களில் அவர்களை காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 17.5.2020 அன்று வீசிய சூறாவளி காற்றின் காரணமாக மண்டபம் வடக்கு மீன்பிடி இறங்குதளம், கோவில்வாடி, பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நங்கூரமிடப்பட்டிருந்த விசைப்படகுகள், மரவள்ளங்கள் மற்றும் கண்ணாடி நாரிழைப்படகுகள் சேதமடைந்தன. மண்டபம் பகுதியில் 18 படகுகள் சேதமடைந்துள்ளது. இதில் 16 படகுகள் பகுதி சேதமடைந்தும் 2 படகுகள் முழுவதும் சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 மர வள்ளங்கள் சேதமடைந்துள்ளது. இதில் 28 படகுகள் பகுதி சேதமடைந்தும், 7 படகுகள் முழுவதும் சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி சேதமடைந்த மீன்பிடி கலன்களுக்கு நிவாரணம் பெற்று வழங்க இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீனவர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மீன்வளத்துறை துணை இயக்குநர் எம்.வி.பிரபாவதி, உதவி இயக்குநர்கள் த.யுவராஜ், வ.அப்துல் காதர் ஜெய்லானி, வட்டாட்சியர்கள் வீ.முருகவேல் (இராமநாதபுரம்),அப்துல் ஜபார் (இராமேஸ்வரம்) உட்பட அரசு அலுவலர்கள், மீனவர்கள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!