17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் ஆய்வாளர் சதீஷ்க்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு

காவல் ஆய்வாளர் சதீஷ்க்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு

எழுதியவர்: mohan May 18, 2020, 2:32 pm

மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சில நாட்களுக்கு முன் சீர்காழி காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் சதிஷ் தடையுத்தரவு காலத்தில் பிடிபட்ட இருசக்கர வாகனங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைத்து கொண்டிருந்தபோது, 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் காவல் நிலைய வாயிலில் காத்துக்கொண்டிருந்தார். காலை பதினோரு மணி அளவில் அந்த முதியவரை காவல் ஆய்வாளர் சதிஷ் அழைத்து உட்காரவைத்து, என்ன குறை தங்களுக்கு, ஏன் வந்தீர்கள் என்று கேட்ட பொழுது,நான் குரூப்-1 அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்றும், தன்னுடைய மனைவி கேன்சரால் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும்,ஒரே மகன் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்ப்பதாகவும், மருமகள் மற்றும் 2 பேர குழந்தையோடு சீர்காழியில் வசித்து வருவதாக கூறினார்.

மேலும் அவருக்கு வயது முதிர்வின் காரணமாக சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம், இருமல் மற்றும் சளி இருப்பதாகவும் ,சளி அதிகமாக இருந்ததால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்று மருமகள் பயந்து, அவரிடம் பேசுவது கிடையாது என்றும், பேரக்குழந்தைகளை பேச அனுமதிக்காமல் வீட்டுக்குள்ளே வைத்திருப்பதால் தனக்கு மன உளைச்சல் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது என்றும் ,அதனால் தன்னை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என கூறி அழத் தொடங்கினார். அவருடைய அழுகையை பார்த்த காவல் ஆய்வாளர் சதீஷ் ,அவரை சமாதானப்படுத்தி உடனடியாக அவரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு விடுவதாக சொல்லி, மேலும் வீட்டில் உள்ள மருமகளின் சந்தேகத்தைப் போக்க வேண்டும் என்பதால் மேற்படி பெரியவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு உரிய பரிசோதனை செய்துவிட்டு பாதிப்பு இல்லை என்ற ரிப்போர்ட்டை பெற்று அழைத்து சென்று அந்த வீட்டிலேயே அவரை விட்டு விட்டு அவருடைய மருமகளிடம் அனைத்தையும் சொல்லி புரிய வைத்து மனிதாபிமானத்தோடு ஒரு பெரியவரின் மன உளைச்சலை போக்கிய மனிதாபிமானமிக்க காவல் ஆய்வாளர் சதீஷை மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.

இதுபோன்று காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் மனித நேயத்தோடு நடந்து கொள்வதற்கு காரணமாக இருந்து வரும் தஞ்சை சரக காவல் துணை தலைவர் டாக்டர் ஜெய லோகநாதன் அவர்களுக்கும், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களுக்கும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.காவல் ஆய்வாளர் சதீஷ் மனிதநேயமிக்க காவலர் என்பதை தனது செய்கையால் நிரூபித்திருக்கிறார். அவரைப் போன்று காவல்துறையில் பணியாற்றுகின்ற காவல்துறை நண்பர்கள் தாங்கள் மக்களின் நண்பர்கள் திக்கற்றவர்களின் உறவினர்கள் என்பதை மனதில் நிறுத்தி, பணியாற்றி தங்களுக்கும் தங்கள் பணியாற்றிவரும் காவல்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதுபோன்ற மனித நேயமிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!