17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து மே.16ல் குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு!

மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து மே.16ல் குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு!

எழுதியவர்: Askar May 14, 2020, 1:08 pm

மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து மே.16ல் குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு!

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 3 முறை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகளின் திட்டமிடப்படாத நடவடிக்கைகள் காரணமாக, கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக மக்கள் சொல்லொன்னா துயரங்களை சந்தித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் உணவில்லாமல் பரிதவித்த செய்திகள், வாகனப் போக்குவரத்து இல்லாமல் பல ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணமாக நடந்து உயிரிழந்த நிகழ்வுகள் என மத்திய அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கால் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மக்கள் படும் துயரங்களை துடைக்க வேண்டிய அரசோ, கரவொலி எழுப்பவும், அகல் விளக்கு ஏற்றவுமான வித்தைகளை செய்யச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றது.

மற்றொருபுறம் கொரோனா பரவலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பினை தூண்டும் வகையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

கொரோனா ஊரடங்கில் மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்காமலும், மாநிலங்களுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி. வரிகளை வழங்காமலும் இழுத்தடித்து, மாநில அரசின் உரிமைகளையும் பறித்து வருகின்றது மத்திய பாஜக அரசு. ஊரடங்கை பயன்படுத்தி காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாநில மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் வகையில் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படியாக மாநில அரசுகளின் உரிமைகள் முடக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி ஊரடங்கு நடவடிக்கையில் மாநில அரசின் செயல்பாடுகளும் மக்களின் துயரைப் போக்கும் வகையில் அமையவில்லை. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வில் வெறும் ரூ.1000 த்தைக் கொண்டு மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். முதல் 21 நாள் ஊரடங்கிற்கு மட்டுமே இத்தகைய உதவிகள் அரசின் சார்பாக வழங்கப்பட்டதே தவிர, அடுத்தடுத்த ஊரடங்கில் அரசு குடிமக்களை காக்க வேண்டிய தனது கடமையை முற்றிலும் மறந்துபோனது. மாறாக மதுபானக் கடைகளை திறந்து வைத்து மேலும் மக்களை பரிதவிப்பில் ஆழ்த்துகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஊரடங்கை பயன்படுத்தி மத்திய மாநில அரசுகள், தங்களது அரசியல் பழிவாங்கும் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றி வருகின்றன. யு.ஏ.பி.ஏ. எனும் கொடுஞ் சட்டத்தின் கீழ் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் சிறை வைக்கப்படுவதும், தேசத் துரோக வழக்குகள் பதிவதுமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன.

ஊரடங்கின் மூலம் நடைபெற்றுவரும் மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய அரசியலுக்கு எதிராக எதிர்வரும் மே.16 அன்று சமூக இடைவெளியுடன் குடைப்பிடித்து மாநிலம் தழுவிய அறவழி முழக்கப் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்துகிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம் ஒருங்கிணைப்பாளர் ஊடகம்& மக்கள் தொடர்பு SDPI கட்சி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!