மத்திய அரசின் ‘ஆரோக்கிய சேது’ செயலி (Arogya Sethu App) – குடிமக்களின் தனியுரிமையில் வேவு பார்க்கும் செயலாகும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கருத்து! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
கோவிட்19 வைரஸ் பரவலையடுத்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய தொடர்பைக் கண்டறியும் செயலியான, ‘ஆரோக்கிய சேது’ (Arogya Sethu App) இந்திய குடிமக்களின் தனியுரிமையில் தலையிட்டு வேவு பார்க்கும் செயலாகும். இச்செயலியை மத்திய அரசு மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் கடந்த ஏப்ரல் 2 அன்று செயல்படுத்தியது.
இச்செயலி புளூடூத் வாயிலாக செயல்பாட்டாளரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து எந்நேரமும் குடிமக்களை கண்காணிப்புக்கு உட்படுத்துவதாகும். குடிமக்களின் தனிமையிலான ஒவ்வொரு அசைவையும், படுக்கையறை உட்பட அனைத்தையும் கண்காணிக்க முடியும் என்பதுதான் இச்செயலியின் அபாயகரமான விளைவாகும்.
ஒவ்வொரு நபரின் எல்லாத் தகவல்களையும் இச்செயலி மத்திய அரசுக்கு வழங்குகிறது. குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களான பெயர், பாலினம், வயது, தொழில், சென்றுவந்த இடங்களின் விபரங்கள் போன்றவற்றை பதிவுசெய்ய தகவல்களை இச்செயலி அரசுக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நபரின் உடல்நிலை சம்மந்தமான ஆரம்பகாலம் முதலான வரலாற்றையும் அரசுடன் இச்செயலி பகிர்கிறது. தொடக்கத்தில் விருப்பமுள்ளவர் மட்டும் இச்செயலியை பதிவிறக்கம் செய்யலாம் என்றிருந்தது பின்பு அனைத்து குடிமக்களுக்கும் கட்டாயமாக்கியது மத்திய அரசு.
ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் தங்கள் அலைபேசிகளில் இச்செயலியை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால் அந்நிறுவனத்தின் தலைவரே பொறுப்பேற்கவேண்டும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அனைத்திற்கும் மேலாக, எந்த தனிப்பட்ட நிறுவனமும் இச்செயலியில் ஊடுருவி குடிமக்களை அவர்கள் அறியாத நிலையில் துல்லியமாகப் பின்தொடர்ந்து கண்காணித்து தகவல் பாதுகாப்புக்கு ஆபத்து உருவாக இச்செயலி காரணமாக அமையக்கூடும்.
குடிமக்களின் தனியுரிமையில் ஊடுருவி அவர்களின் தனிப்பட்ட எல்லாச் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து பதிவுசெய்யும் ‘ஆரோக்கிய சேது’ (Arogya Sethu App) என்ற செயலியை தாமதிக்காமல் மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும் என்றும், பல்வேறு அரசியல், சமூக மற்றும் மனித உரிமை அமைப்புகள் இச்செயலிக்கு எதிராக களமிறங்க முன்வரவேண்டும் என்றும் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்தார்.




You must be logged in to post a comment.