நெல்லை தென்காசி பகுதிகளில் வாழ்வாதாரம் இழந்த நிலையில் பீடி சுற்றும் தொழிலாளர்கள்; வீடுகளுக்கே சென்று வேலை வழங்கிட வேண்டும்- காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்..
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை வருவாய் இழந்து தவிக்கும் பீடி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மக்களின் வறுமையை விரட்டும் வாழ்வாதாரமாக விளங்குவது பீடி தொழிலாகும். சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பல்லாயிரக்கணக்கான குடும்ப பெண்கள் பீடி சுற்றும் தொழில் மூலம் குடும்ப செலவுகள், பிள்ளைகளின் படிப்பு, திருமணம், மருத்துவ செலவுகளை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே பல வருடங்களாக பீடி தொழில் நலிந்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சமூக விலகலை கடைபிடிக்க பீடி கடைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் பீடி சுற்றும் தொழிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் உணவிற்கே அல்லல்படும் நிலையும் எதிர்காலத்தை குறித்த அச்சத்திலும் உள்ளனர்.
ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்க முடியாமலும் மகளிர் சுய உதவிக் குழு கடன் தொகைகளை அடைக்க முடியாமலும் தவிக்கின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலையில் பீடி தொழிலாளர்களின் நிலை இன்னும் பாதிக்கப்படும். ஆகவே நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மக்களின் குறிப்பாக பெண்களின் முக்கிய வருவாயாக விளங்கும் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று இலை மற்றும் தூள் கொடுத்து வேலை வழங்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.