17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வீடுகளுக்கு மின்சார கணக்கெடுக்க பணியாளர்கள் வராததால் கூடுதல் யூனிட்டுக்கு பணம் கட்ட வேண்டிய சூழல்… சலுகைகள் தருமா அரசாங்கம்?.. அச்சத்தில் பொதுமக்கள்..

கீழக்கரையில் வீடுகளுக்கு மின்சார கணக்கெடுக்க பணியாளர்கள் வராததால் கூடுதல் யூனிட்டுக்கு பணம் கட்ட வேண்டிய சூழல்… சலுகைகள் தருமா அரசாங்கம்?.. அச்சத்தில் பொதுமக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 21, 2020, 3:10 pm

கீழக்கரை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 17000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார வாரிய பணியாளர்கள் வீட்டிற்கு வந்து யூனிட்டுகளை கணக்கெடுப்பது வழக்கம். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 15 தேதிகளில் வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். ஆனால் இந்த ஏப்ரல் மாதத்திற்கான கணக்கெடுப்பை எடுக்க மின்வாரிய ஊழியர்கள் இதுவரை யாரும் வீடுகளுக்கு வராததால் கூடுதல் யூனிட்டுக்கு பணம் கட்ட வேண்டிய அச்சத்தில் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இது குறித்து கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதை காரணம் காட்டி, வீடுகளுக்கு வந்து மின்சார கணக்கெடுப்பு எடுக்காமல் இருப்பது சாமானிய மக்களை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 500 யூனிட் கீழ், மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை, அரசு வழங்கி வருகிறது. கீழக்கரையில் ஊரடங்கு உத்தரவிற்கு முன்பே, பல பகுதிகளில் மின் அளவு 501 யூனிட் கடந்த பிறகே தாமதமாக வந்து மின் ஊழியர்கள் கணக்கெடுத்துள்ளது தெரிகிறது.

இதனால் வெறும் 350, 500 ரூபாய் மின் கட்டணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் இதன் மூலம் 2000 ரூபாய் 3000 ரூபாய் என்ற அளவில் மின்கட்டணம் செலுத்த வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது அதிக மின்நுகர்வு என்று குறிப்பிட்டு காரணம் காட்டி மின்வாரியம் மக்களிடம் இருந்து கூடுதலாக டெபாசிட் தொகையும் பெறப்படுவது கொடுமையிலும் கொடுமை. திடீரென மின்கட்டணம் உயர்ந்த காரணத்தை அறியாமல் மக்கள் பணம் கட்டுமிடத்தில் போய் கேள்வி கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை.

இது சம்பந்தமாக உதவி மின் பொறியாளரை சந்தித்து புகார் கொடுத்தால் கண் துடைப்புக்காக வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு மீட்டர் சரியாகத் தான் வேலை செய்கிறது. நீங்க அதிகம் உபயோகப்படுத்தி இருப்பீர்கள் என்று சொல்லி விடுகின்றனர். பணத்தை செலுத்தாவிட்டால், மின் இணைப்பை தொடர முடியாது என்றும் காட்டமாக சொல்கின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் காலதாமதம் ஏற்படுவதால் மானியத்திற்குறிய மின் பயன்பாட்டு அளவு தாண்டி விடுகிறது. இதனால் மானியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கால் வேலையிழந்து பொருளாதாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் சாமானிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் மின்சார வாரியம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!