“கொரானா தாக்கி மரணமடைந்த மருத்துவ பெருமக்களை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த சக்தி எது?-மக்கள் நீதி மய்யம் கேள்வி..!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, ஓ.குப்புணாபுரம் எனும் குக்கிராமத்தில் இருந்து சென்னைக்கு குழந்தை தொழிலாளியாக புலம்பெயர்ந்து வந்து சுமார் 33ஆண்டுகள் கடந்து விட்டது.
எனக்கு விபரம் தெரிந்து *சுனாமிக்கு பிறகு 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தான் சென்னையில் மிகப்பெரிய இயற்கை பேரிடராக அமைந்தது என நினைக்கிறேன்.* அந்த வெள்ளப்பெருக்கு காலத்திலும், “தானே”, “வர்தா”, “ஒக்கி”, “கஜா” போன்ற புயல்களின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டிய சென்னை வாழ் மக்களின் மனிதநேய செயல்பாடுகள் அளப்பரியது.
அதுமட்டுமின்றி தற்போது கொரனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் *மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்திருக்கும் தொழிலாளர்களுக்கும் சென்னை வாழ் தன்னார்வலர்கள், சமூக சேவை அமைப்புகள், வணிகர் சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் என மனிதாபிமான அடிப்படையில் செய்து வரும் உதவிகள் கண்டு மனம் நெகிழ்ந்து போயிருந்தேன்.
கொரனாவெனும் கொள்ளை நோயிடமிருந்து மக்களை காத்திட மருத்துவர்களும், செவிலியர்களும் கடுமையாக போராடி மருத்துவப்பணி செய்து வருகையில் அதன் காரணமாக அவர்களுக்கும் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு* அதில் அண்மையில் *சென்னையில் இரு மருத்துவர்களும், கோவையில் ஒரு மருத்துவரும் உயிரிழந்த நிகழ்வு கடும் வேதனையை தந்திருக்கிறது.
அதே சமயம் மக்களை *கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்திடும் அரும்பணியில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு, அதன் காரணமாக அந்நோய் தாக்கி இன்னுயிர் நீத்த அந்த மருத்துவ பெருமக்களுக்கு உரிய மரியாதை செய்யாததோடு அவர்களின் பூத உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் தடுத்து போராட்டம் என்கிற பெயரில் கற்களை வீசி சென்னை வாழ் மக்கள் தாக்குதல் நடத்தி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமானத்திற்கு பெயர் பெற்ற சென்னை வாழ் மக்களா இப்படி நடந்து கொண்டனர்…? என நினைக்கையில் வேதனை நெஞ்சை அடைப்பதை தடுக்க முடியாமல் வெட்கித் தலை குனிகிறேன்.
மேலும் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த இச்செயல் தன்னிச்சையாக நடந்ததா..? இல்லை இதன் மூலம் ஆதாயம் அடைய நினைத்து தீய சக்திகள் எதுவும் மக்களை உசுப்பேற்றி விட்டதா…?என்கிற சந்தேகம் அழுத்தமாக மனதில் எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
ஏனெனில் *குறிப்பிட்ட மயானத்திற்கு கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவரின் சடலம் கொண்டு வரப்படும் தகவல் மக்களுக்கு எப்படி தெரிந்தது..? ஊரடங்கு அமுலில் இருக்கும் போது பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அந்த மயானங்கள் முன் கூடியது எப்படி..? காவல்துறையினர் அந்தந்த பகுதிகளிலும், முக்கிய சாலைகளின் சந்திப்புகளிலும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போது குறிப்பிட்ட மயானத்தின் முன் மக்கள் ஒன்று சேருவதை தடுக்காமல் விட்டது எப்படி..? ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார பணியாளர்களை பணி செய்ய விடாமல் மக்கள் கற்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தும் வரை தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்காமல் காவல்துறையினர் அமைதி காத்தது ஏன்…? அவர்களின் கைகளை கட்டிப் போட்டிருந்த சக்தி எது…. ? அனைத்திற்கும் மேலாக சென்னை அம்பத்தூர் மயானத்தில் அண்டை மாநில மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திய போதே மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, கொரானா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதாலோ, எரிப்பதாலோ அந்நோய் பரவாது என்கிற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தாமதம் செய்தது ஏன்…? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளும் நம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. எது எப்படியாகினும் மெத்தப்படித்தவர்கள் நிறைந்த சென்னையில் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெற்றதை ஏற்றுக் கொள்ளவோ, சமாதானம் செய்து கொள்ளவோ இயலவில்லை.
கொரனாவெனும் கொடிய அரக்கனால் பல்வேறு உலக நாடுகளில் சிகிச்சை பலனளிக்காமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிவதையும், மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக் கூட இடமில்லாமல் குப்பைகளை போன்று மனித உடல்களை மூட்டை, மூட்டையாக மொத்தமாக குழிகளுக்குள் போட்டு புதைக்கும் காட்சிகளை பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகள்* வாயிலாக நாம் அறிந்து வரும் வேளையில் நமது *மத்திய, மாநில அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகளாலும், நமது பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களாலும் இந்தியாவில் அந்நோய் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது* என்பதை எவராலும் மறுக்க முடியாது.
மக்களின் உயிரைக் காத்திட மத்திய அரசு அறிவித்த ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களின் உயிரை மட்டும் காத்திட நம்மைப் போல் வீடுகளுக்குள் (?!) அவர்களும் முடங்கிப் போயிருந்தால் இந்நேரம் அந்த மருத்துவப் பெருமக்களின் உயிர் பிரிந்திருக்காது.ஆனால் இந்தியாவில் எவ்வளவு மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இக்கட்டான இத்தருணத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினரின் பணிகளை பாராட்டி கை தட்டி, வீடுகளில் விளக்கேற்றி, கட்செவி அஞ்சல், முகநூல், கீச்சகம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடவுளை விட மேலானவர்கள் என புகழ்ந்து பதிவுகள் இட்டு, முகப்பு படத்தில் அவர்களை இறுத்தினால் மட்டும் போதுமா…?
முதலில் மனிதர்களாகிய நமக்கு எவ்வளவு சாதக, பாதகங்கள் ஏற்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் எத்துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சக மனிதர்களை மனிதர்களாக போற்றி மனிதாபிமானத்தோடு செயல்பட உறுதியேற்போம்.
வசதி வாய்ப்புகளிலோ, ஆட்சி அதிகாரத்திலோ, ஒருவர் உயிரோடு இருக்கும் வரை தான் அவர்களுக்கு வெவ்வேறான பெயர்களிட்டு அழைப்போம்.அதுவே அவர்களின் மூச்சுக் காற்று உடலை விட்டு பிரிந்து போனால் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற பாகுபாடின்றி தமிழில் “சடலம்”, ஆங்கிலத்தில் “பாடி”என்று தான் அழைக்கப்படுவர் என்பதை எவரும் மறந்து விட வேண்டாம்.
எனவே வாழும் வரை மட்டுமல்ல இறந்த பிறகும் அதில் இடையூறு செய்யாமல் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள முயற்சி செய்வோம்.
மனிதர்களாக வாழ்வோம்.! மனிதம் காப்போம்…!!*
நன்றி.
அன்புடன் சு.ஆ.பொன்னுசாமி. (மாநில செயலாளர்) “மக்கள் நீதி மய்யம்”,தொழிலாளர்கள்அணி




You must be logged in to post a comment.