இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் மார்ச் 21ல் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் உரிய அனுமதி பெற்று வந்தனர். மார்ச் 22ல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்களால் தங்கள் முகாம்களுக்கு திரும்பிச் செல்ல இயலா நிலை ஏற்பட்டது.
இவர்களில் திருவண்ணாமலை கஷ்தம்பாடி முகாமைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர், சேலம் தாரமங்கலம் முகாமைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேர், நெல்லை சுப்ரமணியபுரம் முகாம், திண்டுக்கல் முகாமைச் சேர்ந்த தலா ஒருவர் என 15 பேர் உடனடியாக தங்கள் முகாம்களுக்கு திரும்ப இயலாமல் போனது.
இதனையடுத்து மார்ச் 25 முதல், மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு துறை தனி துணை ஆட்சியர் அனுமதியின் பேரில் அலுவலக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 15 பேருக்கு மண்டபம் முகாம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எம்.ரமேஷ் தினமும் 3 வேளை உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எஞ்சிய நாட்களுக்கு 15 பேரின் சாப்பாட்டிற்கு உதவுமாறு மண்டபம் முகாமைச் சேர்ந்த மூன் டிவி செய்தியாளர் கரு.கயிலை நாதனிடம், ரமேஷ் தொடர்பு கொண்டார்.
இது குறித்து கயிலை நாதன், அவரது நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார். இவ்விருவரின் கோரிக்கையை கனிவுடன் ஏற்ற ஜூனியர் ரெட் கிராஸ் ராமநாதபுரம் கன்வீனர் எம்.ரமேஷ், 15 பேருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை மாநில தலைமை ஜேஆர்சி அனுமதியுடன் வழங்க முன் வந்தார். திறந்த வெளியில் உறங்கும் 15 பேரின் நிலையை நேரில் பார்த்த கன்வீனர் ரமேஷ், ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரத்தை தொடர்பு கொண்டு படுக்கை விரிப்புகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற ராக்லாண்ட் மதுரம், 20 படுக்கை விரிப்புகள், கை சுத்திகரிப்பான், பிஸ்கட் பாக்கெட்கள் வழங்கினார். இந்நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.ரமேஷ் பாபு, எம்.கபிலன், கே.ராஜன், ரெட் கிராஸ் சொசைட்டி சி.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதே போல் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை ஆகியோர் அறிவுறுத்தல் படி காவலர்களுக்கும், ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கை சுத்திகரிப்பான் பாட்டில்கள் வழங்கப்பட்டது. கீழக்கரை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். சுந்தரம் சார்பில் அப்பகுதியில் சுத்திகரிப்பான் பாட்டில்கள் வழங்கப்பட்டது. ராமேஸ்வரம் தாலுகா கிளை செயலர் எஸ் திரவிய சிங்கம், பொருளாளர் ஜே. ஜே. லியோன் ஆகியோர் மூலம் பேருந்து நிலைய காய்கறி சந்தை, வங்கி வாடிக்கையாளரகளுக்கு சுத்திகரிப்பான் தெளிக்கப்பட்டது. மண்டபம் ஒன்றியம் இருமேனி ஊராட்சி பணியாளர்களுக்கு படுக்கை விரிப்புகள், சுத்திகரிப்பான் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள் ரெட் கிராஸ் சார்பில் வழங்கப்பட்டது. மண்டபம் கல்வி மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் பாலமுருகன் உடனிருந்தார்.









You must be logged in to post a comment.