18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி பகுதிகளில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பரமக்குடியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி பகுதிகளில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எழுதியவர்: mohan April 16, 2020, 2:17 pm

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளோர் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று (15.4.2020) பார்வையிட்டார்.அவர் தெரிவித்ததாவது:இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,777 பேர் திரும்பியுள்ளனர். அவர்களில் தற்போது (15.4.2020 அன்றைய நிலவரப்படி) 418 பேர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கீழக்கரையில் 2 , பரமக்குடி பகுதியில் 5 என 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்களின் தொடர் சிகிச்சை மற்றும் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்பின் பயனாக பரமக்குடி பகுதியைச் சார்ந்த 2 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். குணமடைந்த 2 பேரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். மீதமுள்ள 5 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளது. பரமக்குடி மற்றும் கீழக்கரை நகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து இப்பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திடும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி 7 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பரமக்குடி பகுதியில் 7,500 வீடுகளிலும், கீழக்கரை பகுதியில் 7,000 வீடுகளிலும் 14 நாட்களுக்கு இந்த ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள மக்களுக்குத் தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அவரவர் வீடுகளுக்கு நேரிடையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர தேவையற்ற பயணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேலு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா, காவல் துணை கண்காணிப்பாளர் ரா.சங்கர், நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமரன், வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!