முகநூலில் அவதூறாக பதிவிட்ட இந்து முன்னணி பிரமுகர் கைது..
முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (45). இந்து முன்னணி பிரமுகரான இவர் மீது, இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதில், ஆலங்குளம் இந்து முன்னணி என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்துள்ள மாடசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கார்ட்டூன் படத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார். அதில், முஸ்லிம் அடையாளத்துடன் உள்ள நபர், முதல் படத்தில் தனது உடலில் குண்டுகளை வைத்திருப்பதுபோலவும், அடுத்த படத்தில் வைரஸ் வைத்திருப்பது போலவும் போட்டு, மாநாட்டுக்கு முன், மாநாட்டுக்கு பின் என்று படத்துக்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். இவரது பதிவு மத துவேஷ கருத்துகளுடன் இஸ்லாமை நிந்திக்கும் வகையில் அமைந்துள்ளது. சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
இந்த புகாரின்பேரில், ஊத்துமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாடசாமியை கைது செய்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.