17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கபொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள்-தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்…

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கபொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள்-தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்…

எழுதியவர்: Askar April 15, 2020, 7:19 pm

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள்-தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்…

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் ஆணையின்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன்படியும் குற்றவியல் விசாரணைமுறை சட்டப்பிரிவு 144-ன்படியும் 30.04.2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு காலத்தில் கீழ்க்கண்ட விதிகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பொது இடங்கள் அல்லது எந்த ஒரு வாகனத்திலும் ஐந்துக்கு மேற்பட்ட நபர்களின் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு பயணம் அல்லது பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள நபர்கள் அதாவது தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களின் அனுமதி இல்லாமல் வெளியே செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க மற்றும் மருத்துவ வசதி பெற வெளியே செல்ல நேர்ந்தால் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார சேவைகளை தவிர்த்து அனைத்து இதர நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வீட்டிற்கு நேரடியாக உள்ளாட்சி அமைப்பின் மூலம் விநியோகிக்கப்படும்.

மருந்து, பால், பழங்கள், மளிகைப்பொருட்கள், இறைச்சி மற்றும் மீன், பெட்ரோல்/டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகள் ஷாப்பிங் வளாகங்கள் அனைத்தும் மூடப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் விற்கக்கூடிய கடைகளிலும் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற தவறினால் அந்த கடைகளும் மூடப்படும்.

மருந்துகள் விற்பனை தவிர மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்து அதிகபட்சம் 2 கி.மீ. எல்கைக்குள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். அத்தியாவசிய மற்றும் அவசர சுகாதார சேவைகளைத் தவிர அனைத்து வகையான தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்படும். அடுமனைகள் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைகளை மட்டுமே வழங்க அனுமதியளிக்கப்படுகிறது.

அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் நுழைவு மற்றும் வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

தனி நபர் சுகாதார வழிமுறைகளான சோப்பினால் கைகளைக் கழுவுதல், தும்மும்போது கைக்குட்டைகளைப் பயன்படுத்துதல், வெளியிடங்களில் முகக்கவசங்களை முறையாக மூக்கு மற்றும் வாய் மூடும்படி அணிதல், வீட்டினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், எச்சில் துப்பாதிருத்தல், திறந்தவெளியில் மல ஜலங்கள் கழிக்காதிருத்தல் மூலமாக மட்டுமே கொரோனா நோய்தொற்று முழுமையாக தடுக்க இயலும். பொது இடங்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்கவே இந்த ஊரடங்கு உத்தரவு என்பதை மக்கள் நன்கு உணர்ந்து அரசினால் அறிவுறுத்தப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பொதுமக்கள் தவறாமல் பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறும், கொரோனா தொற்று நோயிலிருந்து தங்களையும் சமுதாயத்ததையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!