திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாந்தி மலை ஆசிரமத்துக்கு சொந்தமான இடத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூர் நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தினமும் உணவு மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் இருப்பவர்களை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர் .அங்கு தங்கியுள்ள சில பெண்களுக்கு தேவையான சேலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அந்த முகாமில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது தங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறியவர்களை வாகனங்களில் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் வெளியூர் சென்றாலும் அங்கு பராமரிக்க உறவினர் கள் இல்லாதவர்கள் அங்கேயே தங்கியிருந்து ஊரடங்கு முடிவடைந்ததும் செல்லும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் கலெக்டர் கூறும்போது, திருவண்ணாமலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்களில் காய்கறிகளை வீதிவீதியாக கொண்டு சென்று விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மளிகை கடைகளில் பொருட்களை வாங்க தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து டோர் டெலிவரி மூலம் வாங்கிக் கொள்ளலாம். பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவே இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.




You must be logged in to post a comment.