17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அறிஞர் ஆனந்த் டெல்டும்டே மீது பொய்வழக்கு: அவரைச் சிறைப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்! மத்திய அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 

அறிஞர் ஆனந்த் டெல்டும்டே மீது பொய்வழக்கு: அவரைச் சிறைப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்! மத்திய அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 

எழுதியவர்: Askar April 12, 2020, 11:31 pm

அறிஞர் ஆனந்த் டெல்டும்டே மீது பொய்வழக்கு: அவரைச் சிறைப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்! மத்திய அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினரும், உலகறிந்த சிந்தனையாளருமான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவை பொய்வழக்குப் புனைந்து சிறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்பரல் 14 அன்று அவர் சிறை அதிகாரிகள் முன் சரணடைய வேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசு அதிகாரிகளின் பிடிவாதமான வற்புறுத்தல்களின் அடிப்படையில்தான், கொரோனா தொற்றின் தீவிரம் தெரிந்தும், அம்பேத்கர் பிறந்தநாளின் முக்கியத்துவம் தெரிந்தும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கொடுத்த அழுத்தத்தின் விளைவாகத்தான், நீதிமன்றமும் அவரைக் கைது செய்யும்வகையில் ஆணையிட்டுள்ளது. இது அவர்மீதான பழிவாங்கல் மட்டுமின்றி புரட்சியாளர்அம்பேத்கருக்கு செய்யும் அவமரியாதை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறோம். இந்நிலையில், மத்திய அரசு அவருக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுத்து அவர் சிறைக்குச் செல்லாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக விசாரணைக் கைதிகளையெல்லாம் விடுவிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எந்த குற்றமும் செய்யாமல், குற்றம் செய்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லாத ஒரு பொய் வழக்கில் அறிஞர் ஆனந்த் டெல்டும்டே அவர்களைக் கைது செய்வது ஏற்புடையது அல்ல.

அம்பேத்கர் அவர்கள் வரையறுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் காரணமாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த தான் பிரதமராக முடிந்தது என்று இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அவ்வப்போது பேசி வருகிறார். அம்பேத்கரைப் பெருமைபடுத்தும் அரசு இதுவென்றும் அடிக்கடி கூறி வருகிறார். அது உண்மையாக இருக்குமேயானால், தலித் மக்களுக்காகத் தனது அறிவாற்றலைப் பயன்படுத்துபவரும், புகழ்பெற்ற ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிபவரும், புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினரும், உலகறிந்த சிந்தனையாளருமான ஆனந்த் டெல்டும்டே அவர்களை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு உடனடியாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அவர் மீதான பொய்வழக்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்

இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!