18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்வாரியத்தின் மின்கட்டண வசூல் நடைமுறை; பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு சிரமத்தை தரும்:-டிடிவி தினகரன்..

மின்வாரியத்தின் மின்கட்டண வசூல் நடைமுறை; பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு சிரமத்தை தரும்:-டிடிவி தினகரன்..

எழுதியவர்: Askar April 11, 2020, 6:07 pm

மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக மின்வாரியம் அறிவித்துள்ள புதிய நடைமுறையானது வணிகர்களுக்கு சிரமத்தை தரும் என டிடிவி தினகரன் எம்எல்ஏ கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. எனவே, முந்தைய கட்டணத்தையே செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது.

மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில், முந்தைய மாத கட்டணத்தை செலுத்தும்படி கூறியதால் அதிருப்தி தெரிவித்தனர். மின்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும், தாமத கட்டணம், அபராதம் மற்றும் மறு இணைப்பு கட்டணம் போன்ற கட்டணங்களை வசூலிக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மின்வாரியத்தின் மின்கட்டண வசூல் நடைமுறையானது பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு சிரமத்தை தரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கடந்த முறை செலுத்திய அதே மின்கட்டணத்தை இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வீடுகளுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் 15 நாட்களுக்கும் மேலாக சிறு குறுதொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு இது சிரமத்தை தரும்.

எனவே வணிகரீதியான மின் இணைப்புகளுக்கு கட்டணத்தொகை மற்றும் கால அவகாசத்தில் உரிய சலுகை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!