17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கு நீட்டிப்பா?வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி, மாஸ்க் அணிந்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை..

ஊரடங்கு நீட்டிப்பா?வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி, மாஸ்க் அணிந்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை..

எழுதியவர்: Askar April 11, 2020, 1:01 pm

கொரோனா நிலவரம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என அறிவிக்கப்பட உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கு வரும் 14ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ஒடிசா மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. பஞ்சாப்பும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்போவதாக கூறியுள்ளது. கர்நாடக அமைச்சரவையும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்திலும் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி, மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தோளில் அணிந்திருந்த துண்டையே முக கவசமாக பயன்படுத்தினார். இதேபோல ஆலோசனையில் பங்கேற்ற முதலமைச்சர்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.

கொரோனா நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், வரும் நாட்களுக்கான திட்டம், மருத்துவத்துறையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மாநில வாரியாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். பரிசோதனை, சிகிச்சை தொடர்பான மருத்துவ உபகரணங்களுக்கான தேவைகள், தேவைப்படும் நிதி, அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பான கோரிக்கைகளை முதலமைச்சர்கள் இந்த ஆலோசனையில் முன்வைத்தனர்.

மிகமுக்கியமாக, ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பதா, விலக்கிக் கொள்வதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட்டிப்பது என்றால் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, ஊரடங்கை விலக்கிக் கொள்வது என்றால் படிப்படியாக செய்வதா மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பிரதமர்-முதலமைச்சர்கள் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!