17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரேஷன் கடைகளில் நாளை முதல் கரோனா நிவாரணம்: ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை!

ரேஷன் கடைகளில் நாளை முதல் கரோனா நிவாரணம்: ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை!

எழுதியவர்: Askar April 1, 2020, 12:38 pm

ரேஷன் கடைகளில் நாளை முதல் கரோனா நிவாரணம்: ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தொடங்குகிறது.

இந்தத் திட்டத்தை கூடுதல் வேலை நேரத்துடன் செயல்படுத்துவதற்காக ரேஷன் கடை பணியாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரிசி பெறும் 2.01 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கம், ஏப்ரல் மாதத்துக்கான பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

நாளொன்றுக்கு சுமாா் 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வாரியாக டோக்கன் வழங்கப்படும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று சிறப்பு தொகுப்புத் திட்ட பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இதற்கான பணிகளில் நியாய விலைக் கடை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதனிடையே, சிக்கலான தருணத்தில் தங்களது உயிரை துச்சமென மதித்து பணியில் ஈடுபட்டு வரும் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா அறிவித்துள்ளாா்.

அதன்படி, விற்பனையாளா்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500-ம், கட்டுநா்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையாளா்கள் 21,517 பேரும், கட்டுநா்களும் 3,777 பேரும் உள்ளனா். இந்த சிறப்பு ஊக்கத் தொகைக்காக ரூ.6.13 கோடி செலவிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!