17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி முக்கிய அறுவை சிகிச்சைகளை நிறுத்தி உயிரிழப்பை ஏற்படுவதை தடுக்க வேண்டும் இராமநாதபுரம் நவாஸ்கனி எம்பி வலியுறுத்தல்..

கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி முக்கிய அறுவை சிகிச்சைகளை நிறுத்தி உயிரிழப்பை ஏற்படுவதை தடுக்க வேண்டும் இராமநாதபுரம் நவாஸ்கனி எம்பி வலியுறுத்தல்..

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2020, 10:29 pm

கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி முக்கிய அறுவை சிகிச்சைகளை நிறுத்தி உயிரிழப்பை ஏற்படுவதை தடுக்க வேண்டும் இராமநாதபுரம்  நவாஸ்கனி எம்பி வலியுறுத்தல்.

அவரது அறிக்கை கூறியிருப்பதாவது’ “ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்தி வரும் அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. இருப்பினும் தனியார் மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை போன்ற அவசர சிகிச்சைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என காரணம் காட்டி காலம் தாமதித்தால் உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

மதுரை தனியார் மருத்துவமனையில் மார்ச் 24 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முஹம்மது முஸ்தபா 51 வயது நபர் எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாத நிலையிலும், கொரோனா பரிசோதனை செய்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என தனியார் மருத்துவமனை நிர்ப்பந்தித்ததால், இன்று காலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மாலை வரை கொரோனா பரிசோதனை செய்யப்படாமல் அரசு மருத்துவமனையிலேயே உயிரிழந்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனையின் அலைக்கழிப்பாலும், அரசு மருத்துவமனையில் கால தாமதத்தாலும் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அவர் உயிரிழந்திருப்பது பெரும் வருத்தத்திற்குரியது. கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்றாலும், முக்கியமான உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்படக்கூடாது.

உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் கொரோனாவிற்கான அறிகுறி இல்லாத நிலையிலும் கொரோனா பரிசோதனை செய்த பின்பு தான் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற நிபந்தனையை தனியார் மருத்துவமனைகள் விதித்ததால் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது பெரும் அலட்சியம்.

எனவே கொரோனா சிகிச்சை ஒரு புறம் இருந்தாலும் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளான இதய அறுவை சிகிச்சை போன்ற முக்கிய சிகிச்சைகளுக்கு காலம் தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளித்து உயிர் காக்க வேண்டும்.

இது தொடர்பாக மாநில அரசு உடனடியாக தலையிட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் கவனம் செலுத்தி மற்றொரு உயிரிழப்பு நிகழா வண்ணம் தடுக்க வேண்டியது அரசின் கடமை. என நவாஸ்கனி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!