18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் பகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு..

இராமேஸ்வரம் பகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2020, 9:57 pm

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மேற்கு கோபுர வாசல் பகுதியில்  தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் இன்று (28.0 3.2020)  பார்வையிட்டார்.

அந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்த்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,125 நபர் திரும்பியுள்ளனர். அவர்களில் 1,092 நபர்கள் 30 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்து கொரோனா அறிகுறி  ஏதும் இல்லாமல் நலமுடன் உள்ளனர். மீதமுள்ள 3,033 நபர்கள் தற்போது அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஸ்டிக்கர் ஒட்டி  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.  தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வீட்டிலிருந்து வெளியே செல்லாமலிருக்க காவல், சுகாதாரம், வருவாய் துறை அலுவலர்கள்  கண்காணித்து வருகின்றனர்.

மங்களூரிலிருந்து திரும்பிய நமது மாவட்டத்தைச் சார்ந்த 650 மீனவர்கள் பொதுஇடம் தேர்வு செய்யப்பட்டு  தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மீனவர்களுக்கு உணவு, குடிநீர்  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றை முற்றிலுமாக தவிர்த்திடும் வகையில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக நகரின் முக்கிய வீதிகள், பொது இடங்களில் 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரில் கலந்த கிருமி நாசினி  ஒரு நாளைக்கு இரு முறை தெளிக்கப்பட்டு சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள்,  தேவிப்பட்டினம் மற்றும் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 படுக்கைகள் என மொத்தம் 260  படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மிகவும் கடினமான இச்சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களது பொறுப்புணர்ந்து மிகவும்  கவனமுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் இராமநாதபுரம் ராஜா  மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைக்  கடைகளின் செயல்பாடு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தங்கச்சிமடம் பகுதியில் போதிய சமூக  இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டமாகக் கூடும் வகையில் செயல்பட்ட ஒரு மருந்தகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின்போது, இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, இராமேஸ்வரம் காவல்  துணை கண்காணிப்பாளர் எம்.மகேஷ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் எஸ்.அர்ச்சுணன்,  நகராட்சி ஆணையாளர்கள் விஸ்வநாதான் (இராமநாதபுரம்), ராமர் (இராமேஸ்வரம்), வட்டாட்சியர் அப்துல்ஜபார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!