17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியில் வரும் மக்கள் மீது லத்தியை சுழற்றுவதா? – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்..

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியில் வரும் மக்கள் மீது லத்தியை சுழற்றுவதா? – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்..

எழுதியவர்: Askar March 27, 2020, 4:40 pm

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியில் வரும் மக்கள் மீது லத்தியை சுழற்றுவதா? – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்.. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா பரவலைத் தடுக்க சமூக விலகலை மக்கள் பின்பற்றும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இந்த உத்தரவை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை இரவு பகல் பாராது மேற்கொண்டு வருகின்றன.

அதேவேளையில் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தும் விதத்தில் சில இடங்களில் காவல்துறை அத்துமீறி நடத்திய தடியடி உள்ளிட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மருத்துவப் பணிக்காக சென்ற செவிலியர் ஒருவருக்கு கூட காவல்துறை அபராதம் விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவை கண்காணிக்கும் காவல்துறையை சேர்ந்த சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்களை என்னவென்று விசாரிக்காமலேயே தடியடி நடத்துவது கண்டிக்கத்தக்கது.

வீட்டைவிட்டு வெளியில் வருபவர்கள் எல்லோரும் ஊர் சுற்றுவதற்காக வெளிவரவில்லை. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வருகின்றனர். அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்துவது ஏற்புடையதல்ல.

காவல்துறையில் சிலர் செய்யும் இதுபோன்ற அத்துமீறலால், இரவு பகல் பாராது கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான காவலர்களின் அர்ப்பணிப்பு மீதும் தேவையற்ற களங்கம் ஏற்பட்டுவிடும்.

எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கோடிக்கணக்கான அன்றாடங் காய்ச்சிகளான தினக்கூலிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏனெனில் வரலாற்றில் அவர்கள் இதுபோன்ற ஊரடங்கு உத்தரவினை சந்தித்தது கிடையாது. முதன்முறையாக அவர்கள் சந்திப்பதால் அவர்களிடம் சொல்லி புரியவைக்க வேண்டுமே தவிர எடுத்தவுடன் லத்தியை கொண்டு தாக்குதல் நடத்தக்கூடாது. மக்களிடம் காவல்துறை சொல்லி புரியவைக்கும் அத்தகைய நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்துள்ளன. ஆனால் சில காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் அத்துமீறலானது அது நெருக்கடிகளையும், பொது மக்களிடம் அச்சத்தையும் உருவாக்குகின்றது. அதுபோன்ற நடவடிக்கைகள் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

அரசு அறிவித்த உதவித் தொகை மற்றும் பொருட்கள் கூட ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து தான் கிடைக்கும். இந்த சூழலில் அத்தியாவசிய பொருட்களின் தேவை காரணமாகவும், அந்த பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அச்சம் காரணமாகவும், விலைவாசி ஏற்றம் காரணமாகவுமே தேவையுடைய மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனை காவல்துறை புரிந்துகொள்ள வேண்டும். பிணியிலிருந்து மக்களை காப்பது போல மக்களின் பசியிலிருந்தும் அவர்களை காக்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவை வெற்றிபெறச் செய்ய கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தினக்கூலி போன்ற அன்றாடங் காய்ச்சிகளின் நிலையையும் கவனத்தில் கொண்டு, அவர்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊரடங்கு உத்தரவை வெற்றிபெற செய்வது என்பது அதிகாரிகளின் கையில் உள்ளது. அதனை மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியமாக்க முடியும். எனவே, கண்ணியமற்ற முறையில் மக்களிடம் நடந்துகொள்வதை காவல்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.

அதோடு அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக அவர்கள் மீது லத்தியை சுழற்றும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!