கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில், புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்றியுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 1 லட்சத்து 82 ஆயிரத்து 611 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போர்க் களத்தில் இருப்பதாகக் கூறியுள்ள ஃபிரான்ஸ், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஃபிரான்சில் 6 ஆயிரத்து 633 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
உணவு, மருந்துகள் வாங்கச் செல்வது, பணிக்கு செல்வது, நடைப் பயிற்சி செல்வது தவிர்த்த வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
குறைந்தது அடுத்த 15 நாட்களுக்கு பயணங்கள், வெளியே செல்வது பெருமளவு குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அவசியத் தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத சூழலில் மட்டும் அலுவலகம் செல்லுமாறும் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளார். வீடுகளில் விசேஷங்களுக்காக கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாம் போர்க் களத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், சோதனை சாவடிகளில் கண்காணிக்கவும் ஒரு லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து ஃபிரான்சும் போக்குவரத்து, மக்கள் நடமாட்டத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி வருகின்றன.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 65 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை அடுத்த 15 நாட்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.




You must be logged in to post a comment.