18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » இதயத்துடிப்பு மானியை கண்டு பிடித்த பிரான்சு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ரெனே லென்னக் (René Laennec) ன் பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 17, 1781)

இதயத்துடிப்பு மானியை கண்டு பிடித்த பிரான்சு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ரெனே லென்னக் (René Laennec) ன் பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 17, 1781)

எழுதியவர்: mohan February 17, 2020, 9:43 am

உலகின் மிகச் சிறந்த மருத்துவர் என்று போற்றப்படுபவரும் நோய்களைக் கண்டறிய புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தவருமான ரெனே லென்னக் (Rene Laennec) பிரான்ஸில் பிப்ரவரி 17, 1781ல் பிறந்தார். 6 வயதில் தாயை இழந்தார். பாதிரியாரான உறவுக்கார தாத்தா இவரை வளர்த்தார். பிறகு, நான்ட்ஸ் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிற்றுவித்து வந்த வேறொரு உறவுக்காரர் இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்.ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய 2 மொழிகளிலும் சிறந்து விளங்கினார். படிப்பிலும் சிறந்த மாணவராக பல பரிசுகளை வென்றார். சிறு வயதிலேயே தன் மாமாவின் வழிகாட்டுதலுடன் மருத்துவம் பயிலத் தொடங்கினார்.

வழக்கறிஞரும், கவிஞருமான அப்பா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மருத்துவப் படிப்பை நிறுத்தினார். கிரேக்க மொழி பயின்று கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1799-ல் மீண்டும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார்.19 வயதில் பாரிஸ் சென்று ‘எகோலே பிராட்டிக்’ ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் பயின்றார். அங்கு மருத்துவம், அறுவை சிகிச்சைக்கான முதல் பரிசை வென்றார். 1802-ல் மாணவராக இருந்தபோதே தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிர்கள் குறித்து கட்டுரைகள் வெளியிட்டார்.

மருத்துவ அறிவியல் இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1804-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். உடல்கூறு குறித்து பல மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்.1808-ல் அத்தெனி மெடிக்கல் (Athenee Medical) என்று அமைப்பை நிறுவினார். பிறகு அது சொசைட்டி அகாடமிக் டி பாரிஸ் (Societe Academique de Paris) என்ற பிரபல அமைப்புடன் இணைக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் நோய்இயல், உடற்கூறுஇயல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.

1816-ல் பாரிஸில் உள்ள நெக்கர் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். 1822-ல் பிரான்ஸ் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். காசநோய், புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர்.கூச்ச சுபாவம் கொண்ட இந்த மருத்துவர் பெண்களின் மார்பில் காதை வைத்து இதயத் துடிப்பைக் கேட்க சங்கோஜப்பட்டார். பெண்களுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்தார் லென்னக். குழாய் போன்ற நீண்ட மரத் தண்டுகளை வைத்து குழந்தைகள் பேசி விளையாடுவதைக் கண்டார். உடனே மரத்தால் ஆன உருளை வடிவ கருவியை வடிவமைத்தார். பின்னாட்களில் இதை பிரிக்கக்கூடிய மூன்று பகுதிகளால் ஆன கருவியாக மேம்படுத்தினார்.அதன் விளைவாக அவர் கண்டுபிடித்த கருவிதான் இதயத்துடிப்பு மானி.

அவர் முதன் முதலில் உருவாக்கிய இதயத்துடிப்பு மானி (ஸ்டெத்தாஸ்கோப்) தற்காலத்திய மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவியைப் போன்றதல்ல. அது, ஓர் அடி நீளம் உள்ள துளை போடப்பட்ட உருளையே ஆகும். குழந்தைகள் ஒரு மரக்குச்சியின் ஒரு முனையில் குண்டூசியால் குத்தித் துளை போட்டனர்.

பின்னர் அவர்கள் ஒருபுறமாக இருந்து ஒலி எழுப்பினர். மறுமுனையில் காதை வைத்து அந்த ஒலியைக் கேட்டனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பிரெஞ்சு மருத்துவருக்குச் சிந்தனை ஓடியது.அந்தச் சிந்தனையின் விளைவாகவே அவர் இதயத்துடிப்பு மானி கருவியை உருவாக்கினார்.தனது இதயத்துடிப்பு மானியை பயன்படுத்தி நோயாளி களைச் சோதித்தார்.அவர் தனது இதயத்துடிப்பு மானி குழாயின் ஒரு முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து, மறு முனையை தன காதில் வைத்து அவருடைய இதயமும், நுரையீரல்களும் எழுப்பிக் கொண்டிருந்த ஒலிகளைக் கேட்டார்.

அவர் முதன் முதலில் உருவாக்கிய இந்த இதயத்துடிப்பு மானி (ஸ்டெதாஸ்கோப்)தான் பிற்காலத்தில் படிப்படியாக முன்னேற்றம் பெற்றது.பிரெஞ்சில் ‘ஸ்டெதஸ்’ என்றால் மார்பு; ‘ஸ்கோப்ஸ்’ என்றால் சோதித்தல். அதனால், தனது கருவிக்கு ‘ஸ்டெதஸ்கோப்’ என்று பெயரிட்டார். மருத்துவ அறிவியலில் இவரது கண்டுபிடிப்பு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.மருத்துவராக, கண்டுபிடிப்பாளராக மட்டுமின்றி, சமூகத்துக்கு பல நன்மைகளை செய்துவந்தார். பல அறப்பணிகளிலும் ஈடுபட்டு வந்த லென்னக் தனது 45 வயதில் ஆகஸ்ட் 13, 1826ல் காசநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.

தகவல்:இரமேஷ், இயற்பியல் பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!