மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் அரசு பஸ்களில் பயணிகளை ஏற்ற மறுப்பு:அறிக்கை தர உத்தரவு.!
மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுப்பது குறித்து சிவகங்கை கிளை மேலாளர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுப்பதுடன் பஸ்கள் அனைத்தும் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன.
இதனால் மதுரை பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்துள்ள நிலையில் காரைக்குடி மண்டல போக்குவரத்து வணிக பிரிவு அலுவலர் அரசு பஸ்கள் திருப்புவனம், திருப்பாசேத்தி பயணிகளை ஏற்ற மறுப்பது குறித்து சிவகங்கை கிளை மேலாளர் அறிக்கை தர உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தில் இருந்து ஒன் டூ ஒன், ஒன் டூ செவன், பாயிண்ட் டூ பாயிண்ட், நடத்துனர் இல்லா பேருந்துகள் தவிர மற்ற பஸ்கள் அனைத்தும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை பயணிகளை ஏற்ற வேண்டும், பயணிகளை ஏற்ற மறுக்கும் போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது என்ன வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஒரு வாரத்தில் அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுப்பதால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் தனியார் பஸ்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. போக்குவரத்து கழக அதிகாரிகள் மதுரை–ராமேஸ்வரம் வழித்தடத்தில் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.