17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் போர்வையில் குண்டர்கள்! – வாகன ஓட்டிகள் மீது தொடரும் அராஜகத் தாக்குதல்!எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்.!

தமிழக சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் போர்வையில் குண்டர்கள்! – வாகன ஓட்டிகள் மீது தொடரும் அராஜகத் தாக்குதல்!எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்.!

எழுதியவர்: Askar January 26, 2020, 9:28 pm

தமிழக சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் போர்வையில் குண்டர்கள்! – வாகன ஓட்டிகள் மீது தொடரும் அராஜகத் தாக்குதல்! எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்.! தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்.! இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஊழியர்களின் அடாவடி அதிகரித்து வருகின்றது. தற்போது பாஸ்ட்டேக் முறை வந்ததற்கு பின்பாக இந்த அடாவடித்தனம் அதிகரித்துள்ளது. ஊழியர்கள் பெயரில் குண்டர்கள் பணியமர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

கடந்த வாரம் மதுரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் பாதையில் வந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனத்தின் ஓட்டுநரையும், அதனைக் தட்டிக்கேட்ட ஐயப்ப பக்தர்களையும் டோல்கேட் குண்டர்களால் தாக்கப்பட்டனர். அதேபோல் இன்று காலை நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் கேரளாவைத் சேர்ந்த குடும்பத்தினர் வந்த வாகனம் பாஸ்டேக் கேட் வழியாக செல்லாமல் கட்டணம் செலுத்தும் கேட் வழியாக வந்ததற்காக வேண்டுமென்றே அந்த வாகனத்தை நிறுத்திவைத்து சுங்கச் சாவடி ஊழியர்கள் காலதாமதம் செய்துள்ளனர். உரிய கட்டணத்தை பெற்று விரைவாக அனுப்பாமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று வாகனத்தில் வந்தவர்கள் கேள்வி கேட்டதற்காக, அங்கு ஊழியர்கள் போர்வையில் இருந்த குண்டர்கள் வாகனத்தில் வந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் மீதும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, காவல்நிலையத்தில் முறையிட்டு வழக்குப் பதிவும் செய்தனர்.

அதேபோல் இன்று காலை செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டிலும் வாகன ஓட்டிகளுக்கு எதிரான ஊழியர்களின் அடாவடி காரணமாக ஏற்பட்ட கைகலப்பு அங்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி அவர்களிடம், கரூர் மணவாசி சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி செய்துள்ளனர். முன்னாள் மக்கள் பிரதிநிதிக்கான அனுமதியை மறுத்து துப்பாக்கி வைத்திருந்த ஊழியர்களை கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் போர்வையில் குண்டர்கள் பணியமர்த்தப்பட்டு வாகன ஓட்டிகளின் மீது அடாவடி தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆகவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, குண்டர்களை பணியமர்த்தும் சுங்கச் சாவடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, அந்த சுங்கச் சாவடியின் ஒப்பந்ததை ரத்து செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். சுங்கச் சாவடிகளில் நிகழும் இத்தகைய அராஜகப் போக்கு தடுத்து நிறுத்தப்படாத பட்சத்தில், பொதுமக்களே அதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். ஆகவே தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!