இதுவரையில் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் அரசாங்கம் நடத்துகிற அணிவகுப்புகள் தவிர்த்துத் தெருமுனைகளில் இப்படி நடந்ததுண்டா? தேசியக் கொடியேற்றுவது, சட்டைகளில் கொடி குத்திக்கொள்வது, யாராவது சிலர் பேசுவது, இனிப்புகள் வழங்குவது என்று முடிந்துவிடும். முதல் முறையாக, குடியரசின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறோம், அரசமைப்பு சாசன முகவுரையை வாசித்து இதைப் பாதுகாக்க உறுதியேற்கிறோம். இனி அது என்ன என்று எல்லோரும் பேசத் தொடங்குவார்கள். அதற்கு என்ன ஆபத்து வந்திருக்கிறது என்று உணர்வார்கள். மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் – மக்கள் தொகை பதிவேடு – குடிமக்கள் பதிவு ஆகியவற்றால் இப்படியொரு நன்மையும் கூட நிகழ்கிறது.
சுதந்திர தினத்தை விடவும் குடியரசு தினம் முக்கியத்துவம் வாய்ந்தது எனலாம். ஏனென்றால் இதுதான் இந்திய நாட்டின் கேரக்டர் என்னவென்று – அடிப்படைத் தன்மை என்னவென்று – தீர்மானித்தது. இந்தியா எந்தவொரு மதத்தின் ஆட்சிக்கும் உட்பட்டதல்ல, இது மதச்சார்பற்ற நாடு கம்பீரமாக அறிவித்த பெருமைக்குரிய நாள் இது. குடியுரிமை, நம்பிக்கை உரிமை, மொழி உரிமை, கல்வி உரிமை, சமத்துவ வாய்ப்புரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படையான உரிமைகளை உறுதிப்படுத்திய அரசுதான் குடியரசு.
பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டு அதிபர் போல்சோனாரோ கலந்துகொள்கிறார். ‘போல்சோனாரோ திரும்பிப் போ’ என்று பல இடங்களில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துகளைக் கூறிவருகிறவர் அவர். எதிர்க்கட்சித் தலைவரான ஒரு பெண்ணைப் பற்றி ”பயப்பட வேண்டாம், உன்னை நான் ரேப் பண்ணிவிட மாட்டேன், ஏனென்றால் அதற்கான தகுதி உனக்கு இல்லை” என்று பேசியவர். அகதிகளாக வந்திருப்பவர்களை சுட்டுக்கொன்றுவிட்டால் பிரேசிலின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று சொன்னவர்.
அப்படிப்பட்டவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ள மத்திய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டதுதான் சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி. இதை விளக்கும் துண்டறிக்கைகளை விநியோகித்துக்கொண்டிருக்கிறோம், ஓரிருவர் அதை வாங்க மறுத்து வேகமாக நடந்ததைக் கவனித்தேன். அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள், இது தங்களுக்குச் சம்பந்தமில்லாத அரசியல் விவகார நோட்டீஸ் என்று. அதே போல் இந்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்குத்தான் பாதிப்பு என்று நினைத்துக்கொள்கிறவர்களும் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், என்ஆர்சி, அத்துடன் இணைந்த என்பிஆர், அவற்றின் அடிப்படையிலான சிஏஏ – இவற்றால் இந்து மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். மன உளைச்சலுக்கு இட்டுச்செல்லும். இந்த நாட்டில், இந்த நாட்டின் குடிமக்களுக்குப் பிறந்த நாம், இங்கேதான் பிறந்தோம், இவர்களுக்குத்தான் பிறந்தோம் என்று சான்றிதழ்கள் காட்ட வேண்டும் என்பது உள்நோக்கமுள்ள ஒரு வன்முறை நடவடிக்கை.
ஆகவேதான் அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிற குடியுரிமையைப் பாதுகாக்க, குடியுரிமையை உறுதிப்படுத்தும் அரசமைப்பு சாசனத்தைப் பாதுகாக்க இந்த இயக்கம். மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்போம், மக்கள்தொகை பதிவேட்டுக்குப் பதிலளிக்க மறுப்போம், குடிமக்கள் பதிவுக்கு ஆவணத்தாள்களைக் காட்ட மாட்டோம் – செய்தித்தாளைக் கூடக் காட்ட மாட்டோம் – என்கிற இந்த இயக்கத்தை இன்று தொடங்குகிறோம்.
குடியரசின் மாண்பு பற்றியும் குடியுரிமை பாதுகாப்பு பற்றியும் வீடுகளில், தேநீர்க் கடைகளில், வேலை செய்யும் இடங்களில், நண்பர்களிடம், உறவினர்களிடம் பேசுவோம். தீபாவளி வந்தால், ரம்ஜான் வந்தால், கிறிஸ்துமஸ் வந்தால் அதை எப்படிக் கொண்டாடுவது என்று குடும்பத்தாருடனும் சுற்றத்தாருடனும் பேசித் திட்டமிடுவது போல குடியரசு தினத்தைப் பற்றியும் பேசுவோம்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னை காரம்பாக்கம் பகுதியில் குடியரசு நாள் உறுதிமொழி ஏற்புடன் குடியுரிமைத் துண்டறிக்கை விநியோகத்தைத் தொடங்கிவைத்து நான் பேசியதிலிருந்து.
-குமரேசன்




You must be logged in to post a comment.