18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு- பி.ஆர்.பாண்டியன் தகவல்.!

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு- பி.ஆர்.பாண்டியன் தகவல்.!

எழுதியவர்: Askar January 21, 2020, 9:51 am

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு- பி.ஆர்.பாண்டியன் தகவல்.!

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் 20.01.2020 திங்கள் கிழமை திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் நிலங்களை அளிக்க மறுத்து விட்டனர். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் காவிரி டெல்டாவில் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் இனி ஹைட்ரோகார்பன் ஆய்விற்கான கிணறு அமைக்க மாசு கட்டுப் பாட்டு வாரியம் அனுமதி தேவையில்லை என்றும், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் தன் விருப்பத்திற்கு கிணறு அமைத்துக்கொள்ளும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.

இச்செயல் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்,அது மட்டுமல்ல கூட்டாட்சி முறையை குழி தோண்டி புதைக்கும் செயல் ஆகும்.

இச்சட்டங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறிவிக்கப்படாத அவசரகால (மிசா) நடவடிக்கைகளை செயல்படுத்தப் படுகிறதோ? என அஞ்ச தோன்றுகிறது. தமிழக அரசு இதனை ஏற்கமாட்டோம் என அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும். இச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டாவில் செயல்படுத்த தடை விதிக்க கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர வழக்கு தொடர உள்ளோம் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அப்போது நகர செயலாளர் சிவ.முத்துராமன், செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!