சேர்ந்தமரம் அடுத்த வீரசிகாமணியில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் மனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் விசித்திர ஓட்டப் போட்டி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அடுத்த வீரசிகாமணியில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் மனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் விசித்திர ஓட்டப் போட்டி நடைபெற்றது.
வீரசிகாமணி கிராமத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் சிறப்பு விளையாட்டுப்போட்டிகள்,சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கான பயனுள்ள நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் 23-வது பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் சிறுவர்,சிறுமியர்கள், பெரியவர்கள் என அனைவரும் பங்கேற்ற இசை நாற்காலி போட்டி, பானை உடைத்தல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
பொங்கல் விளையாட்டு விழாவின் விசித்திர நிகழ்ச்சியாக திருமணமான ஆண்கள் தங்களது மனைவியை முதுகில் சுமந்து ஓடும் விநோத போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் திருமணமான 5 தம்பதியினர் கலந்து கொண்டனர். ருசிகரமான முறையில் நடைபெற்ற இப்போட்டி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. வித்தியாசமான இந்த போட்டி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.