17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பால் விலை கடுமையாக லிட்டருக்கு 4-6 முதல் உயர்வு.!

தனியார் பால் விலை கடுமையாக லிட்டருக்கு 4-6 முதல் உயர்வு.!

எழுதியவர்: Askar January 20, 2020, 9:03 am

பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக காரணம் கூறப்படுகிறது.

ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறுவனங்கள் இன்று (20/01/2020) முதல் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன. பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையிலும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்தப்படுகிறது.

சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. தயிர் லிட்டர் ரூ.58-ல் இருந்து ரூ.62 ஆகவும் அதிகரிக்கிறது.

தனியார் பால் விலை உயர்வதால் ஏழை-எளிய குடும்பங்களில் பட்ஜெட் துண்டு விழும். தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம், தினக்கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள், சிறிய கடைகள், நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய குடும்பங்கள் இந்த கூடுதல் செலவினத்தை எதிர் கொள்ள தயங்குவர்.

தனியார் பால் விலை உயரும் பட்சத்தில் ஆவின் பாலுக்கு மீண்டும் கடுமையான கிராக்கி ஏற்படக்கூடும். ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் விலை லிட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை வித்தியாசம் உள்ளது.

ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஒரு லிட்டர் ரூ. 47, சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) ரூ. 43, செறியூட்டப்பட்ட பால் (ஆரஞ்ச்) ரூ. 51 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறும்போது,

தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 4 வீதம் பால் விலையை திங்கட்கிழமை முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த அனுமதிக்கக்கூடாது.

அரசின் அனுமதியுடன் தான் பால் விலையோ, கொள்முதல் விலையோ கூட்டவோ, குறைக்கவோ வேண்டும். இதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

டாஸ்மாக் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது போல் ஆவின் பால் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அப்போது தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியும்.

ஆண்டுக்கு 2, 3 முறை தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி செல்வதால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய தேவையான பால் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் கீழ் விலை நிர்ணயம் செய்ய விதிமுறைகளை காண வேண்டும் எனக் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!