பழங்குடி இனங்கள் மிகுந்துள்ள மாநிலம் ஜார்க்கண்ட். இயற்கை வளம் நிறைந்த பூமி. அந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக இயற்கை வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
வளர்ச்சி என்ற பெயரால் நேரடியாகவும் பினாமிகள் மூலமாகவும் அந்த வளங்களைக் கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வேட்டையாடத் திறந்துவிட்டது பாஜக அரசாங்கம். சுரங்கங்கள் தோண்டப்பட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதோடு, சுற்றுச்சூழலும் சீர்குலைக்கப்பட்டது.
கல்வியிலும் சுகாதாரத்திலும் மிக மோசமான நிலைமைகளை ஜார்க்கண்ட் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். பாஜக ஆட்சி தொடர்வதை அவர்கள் விரும்பவில்லை.
அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக மத உணர்வுகள் கிளறி விடப்பட்டதையும் அந்த மக்கள் ஏற்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி அங்கே பேசியபோதுதான், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களின் ஆடைகளைப் பார்த்தால் அவர்கள் யார் என்பது தெரிந்துவிடும் என்று சொன்னார். நாட்டின் பிரதமருக்கு இது அழகா?
இந்தச் சட்டத்திற்கு அந்த மாநிலத்திலும் கடும் எதிர்ப்பு இருப்பதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டதன் அடிப்படையில்தான், உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தேவைப்பட்டால் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகப் பேசினார்.
இது சட்டத்தில் தவறான அம்சங்கள் இருக்கின்றன, அவை திருத்தப்பட வேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்விலிருந்து வரவில்லை, தங்களை சமாதானப்படுத்துகிற ஒரு தற்காலிக உத்திதான் என்பதையும் பெரும்பகுதி ஜார்கண்ட் மக்கள் புரிந்து கொண்டார்கள்.
தேர்தல் முடிவு நிலவரங்களில் இதுதான் பிரதிபலிக்கிறது. மக்கள் மனநிலை இதுதான் என்பதைத் தெரிந்துகொண்டதால்தான், பிரதமர் இப்போது “நாங்கள் நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) பற்றியெல்லாம் பேசவில்லை,” என்று பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டிருக்கிறதே? நாடு முழுவதும் இது செயல்படுத்தப்படும் என்று அமித் ஷா சொன்னாரே? மற்ற பாஜக தலைவர்களும் சொன்னார்களே? அவர்களிடம் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என்று மோடி சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்தானே!
அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்




You must be logged in to post a comment.