முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளான டிச. 23ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப் படுகிறது.உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவா் முன்னாள் பிரதமா் சரண் சிங். இவா் உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்துள்ளார். இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது.
இந்தியாவில் நெடுநாள் பிரச்சினையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர். 1979-ம் ஆண்டு ஜூலை மாதம், நாட்டின் 5-வது பிரதமராக பதவியேற்றார், சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ‘ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் உரிமையாளர்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.
மேலும் அவருடைய ஆட்சியின்போது தான் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். ‘ஜமீன்தாரி முறை ஒழிப்பு’, ‘கூட்டுறவு பண்ணை முறை’, ‘இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்’, ‘வேலை செய்பவர்களுக்கு நிலம்’ உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி உயிாிழந்தார்.
டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகின்றனா். இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய திருநாட்டில் தற்போது விவசாயிகளின் நிலை படு மோசமாக உள்ளது. விவசாயிகளால் பல்வேறு போராட்டங்கள் தினமும் முன்னெடுக்கப்படுகிறது.இன்னும் அவர்களின் வாழ்க்கைத்தரம் வெற்றிடமாக காட்சியளிக்கிறது. தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட்டு காற்றாலை,சோலார் மின்உற்பத்தி,சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அமைப்பது என கார்ப்பரேட் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிலங்களாக மாற்றப்பட்டு விவசாயம் அது சார்ந்த தொழில்களை அழித்தொழிக்கும் வேலையை செய்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாயம் சார்ந்த தொழில்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல அரசு பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படும் முழக்கம் மேடைகளில் மட்டும் முழங்கும் வெற்று முழக்கங்களாக உள்ளதே தவிர, செயல்பாட்டில் இல்லை. உண்மையில் விவசாயிகளின் வாழ்க்கை தரம் கேள்விக்குறியாகவே உள்ளது.தற்போதைய ஆட்சியாளர்கள் விவசாயிகளின் இந்நிலையை மாற்ற முற்படுவார்களா?
செய்தியாளர்அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.