செந்தாமரைக்கொடி
விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கவிதாயினி “செந்தாமரைக்கொடியின்” சிறப்புக் கவிதை.!
எழுதியவர்: Askar December 23, 2019, 4:29 pm

உழவே தலையெனில் உழவனே தலைவன்.. அன்னமூட்டும் அன்னை அவனே.. உயிராக்குகிறான் உன்னை என்னை.. பூச்சிகள் முதலாய் புவியின் உயிரினம் யாவும் ஓம்பும் விவசாயம்.. அது வீழ்ந்தால் நிகழும் காட்சிகள் நினைத்தால் தேம்பும் மனிதகுலம்.. பசுமையின் தயவால் வாழ்ந்தோம் இதுவரை.. பணங்காய்ச்சிகள் தயவால் உணவினை தருவித்து வாழ்ந்து கொள்வோம் எதுவரை..? கவலையில்லா வாழ்முறையால் நீ கலைத்துப் போட்ட இயற்கை இன்று அவனின் கழுத்தையிறுக்குகிறது.. நீர் இல்லாது கொல்லும் ஒருமுறை..
நீர் (பொழிவு) நில்லாது கொல்லும் மறுமுறை.. காலமெல்லாம் வேதனையில் நாதியற்று மனவலியில் கதறியழும் நிலக்காவல் மறை..
மேற்பூச்சாய் பேச்சு வார்த்தை களிம்பிற்கும் வழியற்றுத் திரும்பி வரும் அவலநிலை.. என்ன வளமும் குறைவற்ற நம் நாட்டில்.. என்ன நலம் இடுகின்றாய் அவன் ஏந்தும் திருவோட்டில்..? உடலுக்கு மண் குளியல் கண்டுகொண்டது நற்கணம். தாய் மடியின் மண் பாதுகாப்பிற்கு கிளர்ந்தெழு இக்கணம்.. உழவு செய்து கடனையடைக்க வாய்ப்பிழந்த சோற்று வங்கிக்கு.. கடைசி குண்டுமணி தங்கத்தையும் அடகு மீட்க வழியடைக்கிறது இருப்பு வங்கி.. நொடிதோறும் தடுமாறும் வாழ்வா சாவா..
என்று போராடும் வாழ்வை கொடை கொடுத்தது நீயும் நானும் அறிவாயா..? தின்று கழித்து மறந்து நகரும் நன்றிகெட்ட நிலைமாற்றுவோம்.. மண் தலைவன் தாளடியொற்றி தாய்நாட்டைக் காத்திட உறுதியேற்றுவோம்.. உழவே தலையெனில் உழவனே தலைவன்.. விவசாயிகள் தினமின்(றேனும்)று.. தாயன்பின் வேதனையுடன்..



You must be logged in to post a comment.