17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரே சட்டம் – மூன்று முகங்கள்மூன்று சட்டங்கள் – ஒரே முகம்.!

ஒரே சட்டம் – மூன்று முகங்கள்மூன்று சட்டங்கள் – ஒரே முகம்.!

எழுதியவர்: Askar December 23, 2019, 10:13 am

ஒரே சட்டம் – மூன்று முகங்கள் மூன்று சட்டங்கள் – ஒரே முகம்

ஒரு சட்டம் மூன்று முகங்களைக் கொண்டிருப்பதும், மூன்று சட்டங்கள் ஒரே முகத்தைக் கொண்டிருப்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய கூறுகள்.

குடியுரிமை விவகாரத்தில் ஒரே சட்டம் மூன்று முகங்களைக் கொண்டிருப்பது ஒரு கூறு.. முதல் முகம் – அதிகாரப்பூர்வமாக இது குடியுரிமை திருத்தச் சட்டம். இரண்டாவது முகம் – இலங்கைத் தமிழர்கள், மியான்மர் ரோஹியாங்காக்கள், மூன்று நாடுகளின் முஸ்லிம்கள், அதே நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளான வேறு சில சிறுபான்மைப் பிரிவினர், மதமற்றவர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் – இவர்களுக்கெல்லாம் குடியுரிமை கிடையாது என்பதால் இது குடியுரிமை மறுப்புச் சட்டம். மூன்றாவது முகம் – அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தங்களது அடையாள அழிப்பு பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால் இது குடியுரிமை திணிப்புச் சட்டம்.

இரண்டாவது கூறு – மூன்று சட்டங்கள் ஒரே முகத்தைக் கொண்டிருக்கின்றன. சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர் என்ற தேசிய மக்கள்தொகை பதிவு, என்ஆர்சி என்பதான தேசிய குடிமக்கள் பதிவேடு (நாடு முழுவதும் என்ஆர்சி செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பதன் அடிப்படையில் இப்போது என்ஆர்ஐசி – அதாவது தேசிய இந்தியக் குடிமக்கள் பதிவேடு). இந்த மூன்று சட்டங்களையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த மூன்று சட்டங்களுக்கும் ஒரே நோக்கம் – ஒற்றை மத ஆதிக்க நாடாக இந்தியா அறிவிக்கப்படுவதை நோக்கி நகர்த்துவதும், அதற்கு இந்திய மக்கள் மனநிலையைத் தயார் செய்வதும்தான்.

இதற்கு எதிரான போராட்டஙக்ளை ஏன் வெறுக்கிறார்கள்? ஏன் ஒடுக்க முயல்கிறார்கள்? இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் இந்தப் போராட்டங்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கின்றன, ஆட்சியாளர்களைத் தட்டிக்கேட்கின்றன, அதிகார மமதைக்குச் சவால் விடுக்கின்றன. இரண்டாவது காரணம், இந்த போராட்டங்கள் பொதுமக்களிடையே என்ன பிரச்சினை, எதனால் ஏற்பட்ட பிரச்சினை என்ன என்ற செய்திகளையும் உண்மைகளையும் கொண்டு செல்கின்றன. மக்களுக்கு உண்மை தெரிய வருவதை அதிகார பீடம் விரும்புமா என்ன?

எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்குகின்றன என்று வழக்கம்போல் சொல்லி நழுவ முயல்கிறார்கள். அநீதிகளை எதிர்த்துத் தாங்களே போராடுவது மட்டுமல்லாமல், அந்தப் போராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்டுவதும் அரசியல் இயக்கங்களின் ஜனநாயகக் கடமைதான். எதிர்க்கட்சிகள் மக்களின் உணர்வோடு கலந்து இதில் தலையிட்டிருப்பதால்தான் நாடு தழுவிய போராட்டங்கள் இந்த அளவுக்கு முறைப்படுத்தப்பட்டதாக, கட்டுப்பாட்டுடன் நடக்கின்றன.

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!