17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போராட்டங்கள் நாட்டைப் பிளவுபடுத்துகிறதா..?

போராட்டங்கள் நாட்டைப் பிளவுபடுத்துகிறதா..?

எழுதியவர்: Askar December 21, 2019, 7:15 am

போராட்டக்களத்தில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகb மாணவர் ஒருவர் தனது மேல் சட்டையைக் கழற்றிக் காட்டி, “எனது பெயர் ஸ்ரீராம். நான் ஒரு இந்து. ஆனால் எனது முஸ்லிம் சகோதரர்களுக்காகப் போராட வந்திருக்கிறேன்,” என்று கூறுகிறார்.

போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் மாணவர்கள் தொழுகைக்கான நேரம் வந்ததும் அதை நடத்துவதற்காகச் சாலையிலேயே அமர்கிறார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களைச் சுற்றி இந்து மாணவர்கள் அரணாக நிற்கிறார்கள்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் குடியுரிமை கோரும் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில், மற்ற நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் இந்துக்கள் உள்ளிட்ட எந்த மதத்தைச் சேர்ந்தவர்காளானாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதால் தங்களுடைய வாழ்வதாரங்களும் இன அடையாளங்களும் அழியும் என்ற அச்சத்தோடு போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் பழங்குடியினரும் போராடுகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் மக்களைப் பிளவுபடுத்துவதாக பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் போராட்டம், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் நோக்கத்திற்கு எதிராக, நாடு முழுவதும் மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைத்து வருவதைப் பார்க்கிறோம்.

அனைத்துப் பிரிவு மக்களையும் ஈர்த்துள்ள ரஜினிகாந்த், தனக்கு அடையாளம் எதுவும் விழுந்துவிடக்கூடாது என்று கவனத்துடன், மத்திய அரசை எதிர்க்க் கூடாது என்ற எச்சரிக்கையுடன் இருக்கிறார். போராட்டத்தில் வன்முறை வேதனை அளிப்பதாகக் கூறுகிறார்.

ஆனால் போராட்டத்திற்குக் காரணமான குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி எதுவும் சொல்ல மறுக்கிறார். கட்சி என்று தொடங்குகிற வரையில் பிரச்சினைகளில் கருத்துச் சொல்லாமல் பதுங்குவதே பாதுகாப்பானது என்று கருதுகிறார் என்று தெரிகிறது. அதுதான் நிலைப்பாடு என்றால் இந்தக் கருத்தைக் கூட சொல்லாமல் இருந்திருக்கலாமே?

“தேசத்தின் பாதுகாப்பு கருதி” என்று இவரும் சொல்கிறார். அப்படிச் சொல்கிறபோது, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களால்தான் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறதே? இந்த எண்ணம் பரவுமானால், நமது பக்கத்து வீடுகளிலும் எதிர் வீடுகளிலும் வாழ்கிற முஸ்லிம்கள் மீது சந்தேகப் பார்வை ஏற்படாதா? அதுதான் உள்நோக்கம் என்ற விமர்சனம் வரத்தானே செய்யும்?

ஓரிரு கல்லூரிகளின் மாணவர்கள் மட்டும்தான் போராடுகிறார்கள், எல்லோரும் அல்ல என்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். அது உண்மை என்றால் அனைத்துக் கல்லூரிகளுக்கும் அவசர விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது ஏன்?

புதிய நிலைமைகளுக்கு ஏற்ப எந்தவொரு பழைய சட்டத்திலும் திருத்தம் கொண்டு வருவதில் தவறில்லை. அது தவறில்லை என்பதால்தான் அரசமைப்பு சாசனத்திலேயே சட்டத்திருத்த்த்த்ற்கு வழி செய்யப்பட்டிருக்கிறது.

குடியுரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை, திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் திருத்தச் சட்டத்தில் மத அடிப்படையைப் புகுத்தியிருப்பதால்தான் உள்நோக்கம் பற்றிய கேள்வி எழுகிறது. அந்த மூன்று நாடுகளின் மதச் சிறுபான்மையினர் என்று வகைப்படுத்தியதே தவறு.

மதச்சார்பின்மை என்பது மக்களுக்கல்ல அரசுக்குத்தான். மக்கள் தாங்கள் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், எந்த மதத்தையும் பின்பற்றாமலும் இருக்கலாம்.

அந்த உரிமையை உறுதிப்படுத்துகிற அரசமைப்பு சாசனத்தின்படி அரசாங்கம்தான் எந்த மதத்தையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது, மத அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தக்கூடாது. இந்தியாவின் பெருமைக்குரிய இந்த மதச்சார்பின்மைக் கோட்பாடு இந்தியாவிலேயே பிறந்து வாழ்கிற மக்களுக்காக மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருகிறவர்களுக்கும், அடைக்கலம் கோருகிறவர்களுக்கும்தான்.

இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார்கள். ஆம், சட்டத்தில் நேரடியாக அப்படி இல்லைதான். ஏற்கெனவே சொன்னதைப் போல இது உடனிருக்கிற சிறுபான்மையினர் மீது சந்தேகப் பார்வையையும் பகையுணர்வையும் வளர்க்கும். அது பாதிப்பில்லையா?

அத்துடன், இதை தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) சட்டத்துடன் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. நாடு முழுவதும் அது செயல்படுத்தப்படும் என்றும் சொல்கிறார்கள்.

அப்படி நாடு முழுவதும் கொண்டுவரப்படுமானால் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களில் கூட பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலை ஏற்படுகிறது. இந்தியக் குடிமக்கள்தான் என்று தங்களை நிலைநாட்டப் போராட வேண்டியிருக்கும். உள்ளூர் அதிகாரி நினைத்தால் குடிமக்களாகப் பதிவு செய்யலாம், அல்லது பதிவு செய்ய மறுக்கலாம். இதையெல்லாம் எப்படி நாட்டு நலனுக்கான ஏற்பாடுகள் என்று ஏற்க முடியும்?

போராட்டங்கள் சுயமாக நடக்கவில்லை, தூண்டிவிடப்படுகின்றன என்கிறார்கள். ஆம். இந்த மோசமான சட்டங்களால் தூண்டிவிடப்பட்டுதான் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

“நம் கண் முன்னால் ஒரு அநீதி நடக்கிறது, அதை எதிர்த்துப் போராட வாருங்கள்” என்று அழைப்பது மக்கள் நலனுக்காக இயங்குகிற அரசியல் இயக்கங்களின் கடமை. அதை நாங்கள் அறைகூவல் என்கிறோம், அவர்கள் தூண்டிவிடுதல் என்கிறார்கள்.

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!