17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய மானூர் பெரியகுளம்-மகிழ்ச்சியில் விவசாயிகள்

மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய மானூர் பெரியகுளம்-மகிழ்ச்சியில் விவசாயிகள்

எழுதியவர்: mohan December 20, 2019, 5:37 pm

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக மானூர் பெரியகுளம் நிரம்பி வழிகிறது. அதனால் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால், மாவட்டத்தின் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பும் நிலையை எட்டியிருக்கின்றன. அத்துடன் பெரும்பாலான குளங்களும் நிரம்பி மறுகால் பாய்கின்றன. நீர் இருப்பு அதிகம் உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மானூர் பெரியகுளம், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நிரம்பியது. அதன் பின்னர், அந்தக் குளம் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. சிற்றாற்றில் இருந்து வரும் தண்ணீர் 19 குளங்களை நிரப்பிய பின்னர் அந்தக் குளங்களில் இருந்து வெளியேறும் மறுகால் தண்ணீர் மூலமாகவே பெரியகுளம் நிரம்பும் என்பதால், போதுமான மழை இல்லாவிட்டால் இந்தக் குளத்துக்குத் தண்ணீர் வருவதில் சிக்கல் இருந்து வந்தது.சிற்றாற்றிலிருந்து 33 கி.மீ தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டு அதன் வழியாகவே பெரியகுளத்துக்குத் தண்ணீர் வந்து சேரும். ஆனால், அந்தக் கால்வாயின் பல இடங்களில் முள் செடிகளும் மண் திட்டுகளும் அமைந்திருந்ததால் பெரியகுளத்துக்குத் தண்ணீர் வந்து சேர முடியாத நிலை இருந்தது.

இது குறித்து விவசாயிகள், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷிடம் முறையிட்டனர். மானூர் பெரியகுளத்துக்கு நீர் வரும் கால்வாயை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், கால்வாயில் தண்ணீர் வரும் பாதைகளில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை அகற்றிச் சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். அதனால் இந்த ஆண்டு பருவமழை பெய்தபோது சிற்றாற்றிலிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீர் சிரமமில்லாமல் வந்து சேர்ந்ததால் பெரியகுளம் நிரம்பி வழிகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ’’இந்தப் பகுதியில் பரப்பளவில் மிகவும் பெரியதாக இருக்கும் பெரியகுளம் நிரம்பியதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்தக் குளம் 1,120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 6,250 மீட்டர் சுற்றளவு கொண்ட இந்தக் குளத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்க முடியும். இந்தக் குளம் நிரம்பியதால் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயம் செய்ய முடியும்’’ என்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!