அன்னக்கிளி முதல் தாரை தப்பாட்டை வரை, கருப்பு, வெள்ளை , வண்ணம் என ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து கோடான கோடி உள்ளங்களை இசையால் கொள்ளை கொண்ட,
இசை ஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இன்றும் தொடர்கிறது. திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அவர், மேலைநாட்டு சிம்பொனி இசையிலும் சாதனையை தொட்டார். இசைத்துறை சாதனைக்காக பல்வேறு விருதுகளை குவித்த இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கக்கோரி ராமநாதபுரம் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனத்தார், இளையராஜாவை பெருமைப்படுத்தும் விதமாக 5 அடி உயர அவரது உருவ கேக் வடிவமைத்து இசை ரசிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். கடந்த காலங்களில் பாரதியார் உருவ உயர கேக், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பை வெல்ல வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கோப்பை வடிவ கேக் தயாரித்து ரசிகர்களை கவர்ந்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தங்கள் பேக்கரியில் ஐஸ் கிரீம் சாப்பிட பிளாஸ்டிக் கரண்டிக்கு பதிலாக கோதுமை மாவு கரண்டி தயாரித்து வாடிக்கையாளர்களை கவர்ந்தனர். இந்நிலையில் வாழும் காலத்திலேயே இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி அவரது உருவ கேக் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேக்கரி மேலாளர் சதீஷ் கூறுகையில், பிறவி கலைஞர் இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் காதல், தனிமை, ஏக்கம், சோகம், மகிழ்ச்சி, பயணம் என அனைத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்களுடன் பயணித்து பின்னி பிணைந்துள்ளது. உரிய அங்கீகாரம், பாராட்டு மட்டும் தான் ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. உலகக்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இளையராஜாவை நாம் பெருமைபடுத்த வேண்டும். பாரத ரத்னா விருது பட்டியலை பார்த்தால் பலருக்கு மறைவிற்கு பின்னரே வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சாதனையாளர்களை அவர்கள் வாழும்போதே அங்கீகரிப்பதே நாம் அவர்களுக்கு தரும் மிகப்பெரிய மரியாதை, கவுரவம், இளையராஜாவை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி, 50 கிலோ சர்க்கரை ,250 முட்டையால், 5 அடி உயர அவரது உருவச்சிலை கேக் உருவாக்கினோம். ஐந்து பேர் ,5 நாளில் செய்து பார்வைக்கு வைத்த இச்சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்பி எடுத்துச் செல்கின்றனர் என்றார்
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி ராமநாதபுரத்தில் அவரது உருவ கேக்
எழுதியவர்: mohan December 20, 2019, 5:31 pm




You must be logged in to post a comment.