18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் பருவமழை எதிரொலி-பாபநாசம் பிரதான அணை நிரம்பியதால் 3000 கன அடி தண்ணீர் திறப்பு

நெல்லையில் பருவமழை எதிரொலி-பாபநாசம் பிரதான அணை நிரம்பியதால் 3000 கன அடி தண்ணீர் திறப்பு

எழுதியவர்: mohan November 29, 2019, 10:08 am

நெல்லை,தூத்துக்குடி தென்காசி, மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக நன்றாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.இதனால் அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. 3 மாவட்டத்திலும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.நேற்றிரவு பாபநாசம், சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சேர்வலாறில் 24 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதுபோல் கடற்கரை பகுதியான திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் இன்று காலை வரை அங்கு 37 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.இதனால் அந்த இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 142.35 அடியாக இருந்தது.தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்வதால் பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 142.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1754 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. ஆகவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தடையை மீறி யாரும் செல்ல முடியாத வகையில் வனத்துறையினர் சாலையில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.பாபநாசம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!