புதிய தென்காசி மாவட்டம் வரும் 22-ஆம் தேதி துவங்க உள்ளது. சுமார் 60 ஆயிரம் மக்கள் தொகை சுரண்டை கொண்ட நகர பஞ்சாயத்து தென்காசி புதிய மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 29 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட இப்பகுதி தென்காசி தொகுதி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வந்த வர்த்தக நகரங்களில் ஒன்றாகவும் சுரண்டை உள்ளது.இப்பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழில்களாக விவசாயம் மற்றும் வர்த்தகம் உள்ளது.மேலும் கடின உழைப்பையும், வியாபார நுணுக்கங்களையும், பல சிறு மற்றும் குறுந்தொழில்கள், அதிகமான கல்விச்சாலைகள் நிறைந்துள்ள சுரண்டை தென்காசி மாவட்டத்தில் இன்னும் அதிகமாக வளரும் நகராகவும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சுரண்டை பகுதியின் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளாக பின்வருவனவற்றை இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.சுரண்டை மிக முக்கியமான வர்த்தக நகரம் ஆகும் போக்குவரத்து வசதியை பொறுத்தவரை சுரண்டையில் இருந்து சுற்றியுள்ள முக்கிய கிராமங்களுக்கு பஸ்கள் இருந்தாலும் சென்னை, கோவை, பெங்களூர், ஈரோடு, தேனி, குமுளி, மூணார், தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு நேரடி பஸ் வசதி இல்லை ஆகவே இப்பகுதிகளுக்கு நேரடி பஸ் வசதி இயக்குவதுடன், சுரண்டை பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான அரசு போக்குவரத்து டெப்போ அமைத்தால் இன்னும் இப்பகுதி வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை.
அத்தியூத்திலிருந்து, சுரண்டை, சேர்ந்தமரம், சங்கரன்கோவில் வழியாக ராஜபாளையம் வரை சாலைகளை நான்கு வழி சாலையாக மாற்றி போக்குவரத்து வசதியை துரிதப்படுத்த வேண்டும்.திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவிலை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வு மேற்க்கொண்டும் அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஆகவே இப்பணிகளை விரைந்து முடித்து ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.சுரண்டை நகராட்சி அந்தஸ்துக்கு தகுதி பெற்றும் கடந்த 15 வருடங்களாக நகராட்சியாக தரம் உயர்த்தப்படவில்லை ஆகவே உடனடியாக சுரண்டை டவுன் பஞ்சாயத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.சுரண்டை, சாம்பவர் வடகரை, சேர்ந்தமரம், வீரகேரளம்புதூர், ஆய்க்குடி ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி டிஎஸ்பி ஆபீஸ் சுரண்டையில் அமைக்கவேண்டும்.மிக முக்கியமாக சுரண்டையில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
சுரண்டை சுற்றியுள்ள 200க்கும் அதிகமான கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 24 மணி நேர சிகிச்சை கிடைக்கும் பொருட்டு சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 60 படுக்கை வசதி, அறுவை சிகிச்சை வசதி, உட்பட நவீன வசதியுடன் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.சுரண்டை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து சுரண்டையை தலைமையிடமாகக் கொண்டு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அமைக்கவேண்டும். சுரண்டையில் வட்டார கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும்.சுரண்டையில் விளைகின்ற பணப்பயிர்களையும், காய்கறிகளையும் சேகரிக்கும் பொருட்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய கிட்டங்கி அமைக்க வேண்டும்.
சுரண்டை பகுதியில் அரசு கல்லூரி சிறப்பாக இயங்கி வரும் நிலையில் சுரண்டையை மையமாகக் கொண்டு அரசு பாலிடெக்னிக் துவங்க வேண்டும்.சுரண்டையில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான மாணவர் விடுதி அமைக்க வேண்டும். சுரண்டையை மையமாக கொண்டு புதிய சட்டமன்ற தொகுதி உருவாக்க வேண்டும்.நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொருட்டு சுரண்டையில் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் அமைத்தல் வேண்டும்.பீடி தொழிலாளர் நலன் கருதி தொழிலாளர் நல மருத்துவமனையை படுக்கை வசதியுடன் நவீனமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை புதிய தென்காசி மாவட்டத்தில் எதிர்பார்த்து பொதுமக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.