நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நெல்லை அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து தமிழ்நாடு நாள் விழா கவியரங்கம் மற்றும் இளைஞர் கருத்தரங்கம் நடத்தியது. இந்த நிகழ்வில் வருகை தந்த அனைவரையும் மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி வரவேற்று பேசினார். எழுத்தாளர் நாறும்பூநாதன், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் முனைவர் வைடூரியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே.ராஜேந்திரன் தலைமையேற்றார். கவியரங்கில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, தூய யோவான் கல்லூரி ,தூய சவேரியார் கல்லூரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவ-மாணவிகளும், பேராசிரியர்களும், மகளிரும் , பொதிகைத் தமிழ்ச் சங்க கவிஞர்களும் கவிதைகள் வாசித்தனர். கவியரங்கத் தலைமையுரையில்”தமிழ் நாடு நாள் விழா நடத்த அரசாணை வெளியிட்ட தமிழக முதலமைச்சர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், அரசின் தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் விஜயராகவன் ஆகியோருக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வரும் ஆண்டிலிருந்து”தமிழ் நாடு நாள்”விழா அன்று விடுமுறை அளிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என கவிஞர் பே.இராஜேந்திரன் குறிப்பிட்டார். அதனை அடுத்து இளைஞர் அரங்கம் நடைபெற்றது. ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் இரா உமாதேவி தலைமையில் நடந்த இளைஞர் அரங்கில் பல கல்லூரி மாணவ மாணவிகள் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் பெருமைகளை பல்வேறு சிறப்புகளை பற்றி பேசியது சிறப்பாக அமைந்திருந்தது.விழாவின் நிறைவாக தூய யோவான் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் .ஜான் கென்னடி வேதநாதன் விழா பேருரை ஆற்றி, கவியரங்கு, இளைஞர் அரங்கம் ஆகியவற்றில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்திரபாபு தமிழ் தாய் வாழ்த்து பாடினார். தமிழ்நாடு நாள் சிறப்பு பாடலை கவிஞர் ந. சுப்பையா பாடினார். கவிஞர் பாப்பாக்குடி அ. முருகன் நன்றி கூறினார். விழாவில் தமிழ் ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்







You must be logged in to post a comment.