சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் 572 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 78 இலட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் விலையில்லா தங்கம் வழங்கினார்.இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம் பெண்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக, பெண் கல்வியினை ஊக்குவித்திடும் நோக்கில் 2011-ஆம் ஆண்டு முதல் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகின்றது. 2011-12ஆம் நிதியாண்டு முதல் 2016-17-ஆம் நிதியாண்டு வரையில் பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு நிதியுதவியாக ரூ.50,000-ம், 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள பெண்களுக்கு நிதியுதவியாக ரூ.25,000-ம் திருமண திருமாங்கல்யத்திற்கு விலையில்லாமல் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன்படி,2011-12ஆம் நிதியாண்டு முதல் 2016-17ஆம் நிதியாண்டு வரையில் இத்திட்டத்தின் கீழ் 22,972 ஏழைப் பெண்கள் ரூ.93.16 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்று பயனடைந்துள்ளனர். 2017-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தினை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 8,261 ஏழைப் பெண்கள் ரூ.51.19 கோடி மதிப்பில் நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்று பயனடைந்துள்ளனர். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 300 பட்டதாரி பெண்கள், 272 பட்டதாரி அல்லாத பெண்கள் என 572 பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவித் தொகையாக ரூ.2 கோடியே 18 லட்சம், ரூ.17 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் என ரூ.3 கோடியே 78 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் விலையில்லா தங்கம் வழங்கப்படுகின்றதுஎன பேசினார்.இவ்விழாவில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.வ.ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் திருமதி.முத்துலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.