இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், எஸ்.டி.சேதுராஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 55 பயனாளிகளுக்கு ரூ.14.08 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிலையிலான அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்;வு காணும் விதமாக மாதந்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது. பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் விழிப்புணர்வு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பருவ மழைக்காலத்தை கருத்தில் கொண்டு மழை நீரை சேமித்திட தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 69 பொதுப்பணித்துறை கண்மாய்கள் ரூ.37.57 கோடி மதிப்பில் தூர் வாரப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள 224 சிறுபாசன கண்மாய்கள் தலா ரூ.5 இலட்சம் மதிப்பிலும், 988 ஊரணிகள் தலா ரூ.1 இலட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நீர்நிலை புனரமைப்புப் பணிகள் தற்போதைய மழைநீரை சேகரிக்க ஏதுவாக அமைகின்றது.
இக்காலத்தில் நமக்கு எதிர்பார்த்த மழையின் அளவான 182.06 மி.மீ.-ல் இதுவரை நமக்கு 117.82 மி.மீ. கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கின்றது. நமது மாவட்டத்தில் 1,25,000 ஹெக்டேர் மதிப்பில் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு இந்த மழை பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமின்றி மிளகாய் மற்றும் சிறுதானியங்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும் 20,000 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. நமது கிராமத்திலுள்ள பொதுமக்களின் ஒத்துழைப்போடு தான் நாம் இந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். விவசாயிதாரர்களின் நலனை காத்திடவும், அவர்களது விவசாய நிலங்களில் தலா ரூ.1 இலட்சம் மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு மழைநீரை சேமிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த பண்ணைக்குட்டைகளை பயன்படுத்தி விவசாயதாரர்கள் தங்களது விளைநிலத்திற்கு தேவையான நீரின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த ஆண்டு மட்டும் 2565 பண்ணைக் குட்டைகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் இதுவரை ஏறத்தாழ 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுதவிர, விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் ஆண்டில் 1,20,846 விவசாயிகளுக்கு ரூ.529.06 கோடி மதிப்பிலும், 2017-18 ஆம் ஆண்டில் 1,44,369 விவசாயிகளுக்கு ரூ.469.99 கோடி மதிப்பிலும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல நடப்பாண்டில் முதற்கட்டமாக 121 வருவாய் கிராமங்களுக்கு ரூ.175 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள கிராமங்களுக்கு உரிய பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயதாரர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவும், அவர்களுக்கு நிலையான வருமானத்தை உருவாக்கிடவும் அரசின் சார்பாக பல்வேறு திட்டங்கள் விவசாயத் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்கள் மற்றும் மானிய விலையில் இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயதாரர்களின் விலைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டு செய்து விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயதாரர்களுக்கு வருடந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.







You must be logged in to post a comment.