17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » பழனியில் அவசர முக்கியத்துவம் கருதி போர்க்கால அடிப்படையில் மனநல காப்பகம் அமைக்க TARATDAC வலியுறுத்தல்..

பழனியில் அவசர முக்கியத்துவம் கருதி போர்க்கால அடிப்படையில் மனநல காப்பகம் அமைக்க TARATDAC வலியுறுத்தல்..

எழுதியவர்: mohan September 28, 2019, 3:41 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பழனி அரசு மருத்துவமனை அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அங்குள்ள ட்ரான்ஸ்பார்மரில் ஏறி மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து பழனி சார் ஆட்சியரின் அவர்களின் உத்தரவின் பேரில் பழனி நகரம் முழுவதும் சுற்றித்திரியும் மனநிலை பாதிக்கப்பட்ட 17 மாற்றுத்திறனாளிகளை காப்பகத்தில் சேர்க்கும் முயற்சியை அரசு நிர்வாகம் மேற்கொண்டது.சார் ஆட்சியரின் இந்த மனிதநேய பணிக்கு TARATDAC-பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

அதே வேளையில், பிரச்சனை ஏற்பட்டவுடன் தலையிடுவதும் பின்னர் கண்டும் காணாமல் இருக்கும் போக்கும் தொடர்கதையாக உள்ளது.இந்த 17 மாற்றுத்திறனாளிகளை காப்பகத்தில் இணைத்துவிட்டால் பழனியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் அவலங்கள் முற்றிலும் ஒளிந்து விடுமா என்கிற ஐயப்பாடும் எழத்தான் செய்கிறது.தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பழனி கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பழனியில் கொண்டுவந்து விட்டுச்செல்லும் அவலம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு விடப்படும் மாற்றுத்திறனாளிகள் பலரும் சில நாட்கள் மட்டுமே அங்கு சுற்றித்திரிவார்கள். பின்னர் அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.இவர்கள் குணமாகி தங்கள் வீடுகளுக்கு செல்கிறார்களா அல்லது சமூக விரோத சக்திகளிடம் மாட்டிவிடுகிறார்களா என்கிற விபரம் புரியாத புதிராக உள்ளது.பழனி நகரில் மட்டுமல்ல பழனி தாலுகா முழுவதும் பல்வேறு கிராமங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தெருக்களில் அலைந்து திரிவது என்பது இன்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாக பெண் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் அரங்கேற்றும் நிலையும் தொடர்ச்சியாக உள்ளது. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒருநாள் மட்டும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து முகாம்களில் சேர்ப்பதைவிட நிரந்தரமாக பழனியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகத்தை ஏற்ப்படுத்துவதே மிகச்சிறந்த வழியாகும்.எனவே, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக TARATDAC சார்பில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் இயற்றியும், போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தும் கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருக்கிறது.

மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கான காப்பகத்தை பழனியில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S. மாலதி – நகர தலைவர் P. தங்கவேல் – நகர செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!