திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் K.கீரனூர் கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களின் உடல்நலத்தை பேணுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தினசரி வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருகை தரும் நோயாளிகளில் மாற்றுத்திறனாளிகளும் வயதானவர்களும் அடக்கம். பொதுவாக நோய் வந்தாலே யாராலும் படிக்கட்டில் ஏறி நடக்க முடியாது. கைத்தாங்கலாக அழைத்து சென்றால்தான் மருத்துவரை பார்க்க முடியும். இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள எந்த ஒரு கட்டிடத்திலும் சாய்வுதளம் அமைக்கப்படவில்லை.
குறிப்பாக சித்த மருத்துவ கட்டிடம், பொது மருத்துவரை சந்திக்கும் கட்டிடம் என எங்கு பார்த்தாலும் படிக்கட்டுகளே இருக்கிறது.இந்த குறைகள் பற்றி அங்கு பணியாற்றும் மருத்துவரிடம் கேட்டால் இங்கு வரும் நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், வீல்சேர் வசதி உட்பட செய்யப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.இம்மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் சாய்வுதளம் அமைக்காமல் இருந்துவிட்டு வீல்சேர் வைத்து என்ன பலன். படிக்கட்டில் வீல்சேரில் எப்படி ஏறி செல்லமுடியும்.
மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவமனைகளில் கூட சாய்வுதளம் அமைக்காமல் இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தர வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வேறு வழியின்றி அனைத்து மருத்துவமனைகள் முன்பாகவும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.